Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி
TVK : 'மீட்டிங் என்ற பெயரால் ஆக்ட்டிங்; பாஜகவின் கைப்பாவை' - தவெகவை காட்டமாக விமர்சிக்கும் முரசொலி
'முரசொலி தலையங்கம்'
கரூர் சம்பவத்தை முன்வைத்து திமுகவின் முரசொலி நாளிதழில் தவெகவை கடுமையாக விமர்சித்து ஒரு தலையங்கம் எழுதியிருக்கின்றனர். சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வரும் நிலையில், முரசொலியில் இந்த தலையங்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

தவெக கொல்லும்; நீதி வெல்லும்! என்ற தலைப்பில் விஜய்யை கடுமையாக சாடியிருக்கும் அந்த தலையங்கத்தில், '41 உயிர்களைக் கொன்ற விஜய் பனையூரில் பதுங்கிக் கொண்டு, 'நீதி வெல்லும்' என்று டுவிட்டர் போடுகிறார்.
'சேடிஸ்ட் விஜய்!'
மீட்டிங் என்ற பெயரால் ஆக்ட்டிங் நடத்தி விட்டு, சினிமாவில் 'சும்மா' கொல்வதைப் போல, நிஜத்தில் கொன்று விட்டு, லைட்டைப் போட்டு ஆப் செய்து விளையாடும் சேடிஸ்ட் மனிதனின் விளம்பரப் பசிக்கு 41 உயிர்களா?' எனக் கூறப்பட்டிருக்கிறது.
விஜய்யின் காலதாமதமும் கூட்டநெரிசலை அறிந்த பிறகும் அவர் பேச்சைத் தொடர்ந்ததுமே அந்த சம்பவத்துக்கு காரணமென குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இதுகுறித்து, 'சொன்ன நேரத்துக்கு வரத் தெரியவில்லை. காக்க வைத்து காக்க வைத்து, சோறு தண்ணீரைத் தராமல் உடல் வாதையை ஏற்றிவிட்டு, மூச்சுத் திணற வைத்து, செத்து விழுபவர்களைப் பார்த்த பிறகும் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டிருக்க கொடூரமான வில்லனாலும் முடியாது. அதை ரசிக்கும் ஒருவரால்தான் முடியும்.

பொதுவாக கூட்டம் அதிகமாகிவிட்டது என்றால் சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே தலைவர்கள் வந்துவிடுவார்கள். அதுதான் வழக்கம். ஆனால் விஜய், கூட்டம் நெரிசலாகி, மூச்சு முட்டி, சாகும் வரை பஸ்ஸுக்குள் காத்திருக்கிறார். கரூருக்கு வந்தவர், சாவூர் வரும் வரை ஊருக்கு வெளியில் பதுங்கி இருக்கிறார். மூச்சு முட்டத் தொடங்கி விட்டது என்றதும் லைட்டை ஆப் செய்து விட்டு, நுழைகிறார். இருட்டு பஸ்ஸைப் பார்த்து மிரள் கிறார்கள் ரசிகர்கள்.
'போலி மனுக்கள்!'
தண்ணீர் கேட்ட ஒருவருக்கு விஜய், தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார். கூட்டத்தில் எதையும் தூக்கிப் போடக் கூடாது என்பது சாதாரணமான லாஜிக். ஹீரோ தூக்கிப் போட்டால் கூட்டமே அதைப் பிடிக்கும். இது நல்ல 'ஷாட்' ஆக இருக்கலாம். ஆனால் 'ஷாக்' ஆனது மக்கள்தான். கூட்டத்தின் போக்குக்கு ஏற்ப மக்கள் விழத் தொடங்கியது அதன் பிறகுதான். மிதிபட்டது அதன் பிறகுதான். இது எதையும் கண்டு கொள்ளாமல், கரூரில் இருந்து தப்பினார் விஜய்.' எனக் கூறியிருக்கின்றனர்.

கரூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் போலியான மனுக்களை தாக்கல் செய்து சி.பி.ஐ விசாரணை பெறப்பட்டிருப்பதாக விமர்சிக்கும் அந்த தலையங்கம், 'கரூர் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் என்று சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம். "கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருப்பது இடைக்கால உத்தரவுதான். சி.பி.ஐ. விசாரணை கோரி மோசடியாக மனு தாக்கல் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதும். முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படும்" என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் சொல்லி இருக்கிறார். அதற்குள் 'நீதி வெல்லும்' என்று அவசரப்படுகிறார் விஜய்.
'பா.ஜ.கவின் கைப்பாவை!'
கடந்த ஜூலை மாதம் திருப்புவனம் அஜித்குமார் இறந்தது தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், 'எதற்காக சி.பி.ஐ. பின்னால் ஒளிகிறீர்கள்? சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யின் கைப்பாவை' என்று சொன்னார். இன்று அவரே கைப்பாவையின் கைப்பாவையாக ஆகிவிட்டார். அவரது கட்சியே அவர்களால் உருவாக்கப்பட்டதுதானே?
பா.ஜ.க.வை 'பாசிசம்' என்றும், 'நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்களே என்று விஜய் சொல்லி அழைத்த பிறகும் பா.ஜ.க.வுக்கு கோபம் வரவில்லை என்றால் அந்த ஸ்கிரிப்ட், 'பா.ஜ.க. ஸ்கிரிப்ட்' என்றுதானே அர்த்தம்?' என்றும் கூறியிருக்கிறது.
வழக்கமாக அதிமுகவையும் பாஜகவையும் மட்டுமே விமர்சித்து முரசொலியில் தலையங்கம் வெளியிடப்படும். புதிதாக தொடங்கப்படும் கட்சிகளை திமுக தரப்பிலிருந்து அதிகமாக விமர்சிக்கமாட்டார்கள். அப்படியிருக்க தவெகவை நோக்கிய முரசொலியின் தலையங்க தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.