பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
Smriti Mandhana: பலரின் ரோல் மாடல்; மாஸ் ஸ்டோரி ஆஃப் தி `குயின்'
மகளிர் கிரிக்கெட்டில் தற்போது உலக அளவில் பிரபலமான இந்திய வீராங்கனைகளின் பெயர்களைப் பட்டியலிடச் சொன்னால், பெரும்பாலானோர் சட்டென உச்சரிக்கும் பெயர் ஸ்மிருதி மந்தனா.
ஆடவர் கிரிக்கெட்டில் கோலி எப்படி `கிங்' என்று புகழப்படுகிறாரோ சற்றும் குறைவில்லாத அளவுக்கு ஆடும் ஸ்மிருதி மந்தனாவை `குயின்' என்று அழைப்பது பொருத்தமானதே.
மும்பையில் ஒரு சாதாரண இளம் பெண்ணாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உயர்ந்திருக்கிறார்.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற பெருமைக்குரியவர் என்ற சாதனையே அவர் யார் என்பதை இந்தியாவைக் கடந்து சர்வதேச அரங்கில் உரக்க ஒலிக்கும்.
இன்றைய இளம் தலைமுறை வீராங்கனைகளின் ரோல் மாடலாகத் திகழும் இவரின் கிரிக்கெட் வாழ்வை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஆரம்பகால வாழ்க்கையும் கிரிக்கெட் அறிமுகமும்
ஜூலை 18, 1996 அன்று மும்பையில் பிறந்த ஸ்மிருதி மந்தனாவின் கிரிக்கெட் பயணம் அவரது சகோதரர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து சிறுவயதிலேயே தொடங்கிவிட்டது.
ஆறு வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற ஸ்மிருதி மந்தனா, 13 வயதில் மகாராஷ்டிராவின் சீனியர் அணிக்காக அறிமுகமானர்.

இளம் வயதிலேயே சீனியர் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியது, அவர் தனது முக்கியமான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், விளையாட்டைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும் உதவியது.
அதன் எதிரொலியாக உள்நாட்டு லீக் தொடர்களில் வெளிப்பட்ட அவரின் ஆட்டம் விரைவில் முக்கிய அணிகளின் கவனத்தை ஈர்த்தது.
இதன் விளைவாக, பல்வேறு வயது பிரிவு அணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மந்தனா, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக உருவெடுத்தார்.
சர்வதேச அறிமுகமும் திருப்புமுனையும்!
ஏப்ரல் 2013-ல், வெறும் 16 வயதில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா, தனது முதல் போட்டியிலேயே அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்.
ஆனால் அவரது உண்மையான திருப்புமுனை 2017 ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது நிகழ்ந்தது.
அந்த உலகக் கோப்பைத் தொடரில் மிக முக்கியமான கட்டங்களில் நிலைத்து நின்று ரன்களைக் குவித்த அவரின் ஆட்டத்தால், 2005-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நாட் அவுட்டாக 90 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 86 ரன்களும் குவித்த அவரின் க்ரூஷியல் இன்னிங்ஸ், எத்தகைய அழுத்தமான சூழலிலும் பதறாமல் ஆடக்கூடிய நம்பகமான வீராங்கனை என்ற நற்பெயரை அவருக்கு உறுதிப்படுத்தியது.
அந்த உலகக் கோப்பையே மந்தனாவை சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக உயர்த்தியது.
சாதனைகள்!
பிப்ரவரி 2019-ல் நியூசிலாந்திற்கு எதிராக வெறும் 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்து, சர்வதேச T20 போட்டிகளில் ஒரு இந்தியப் பெண்மணியின் வேகமான அரைசதத்திற்கான சாதனையைப் படைத்தார்.
ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக 10 அரைசதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற தனிப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரரும் இவரே.

ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எட்டிய வேகமான மற்றும் இளைய வீராங்கனை என்ற சாதனையை நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நிகழ்த்திக்காட்டினார்.
5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
உள்நாட்டு சாதனைகள்:
19 வயதுக்குட்பட்டோருக்கான மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் 50 ஓவர் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி.
சர்வதேச விருதுகள்:
2018 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற பெருமைக்குரியவர்.
இந்த விருதை இரண்டு முறை வென்ற இரண்டு வீராங்கனைகளில் ஒருவர் என்ற தனிச்சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
இந்த சாதனைகள் மந்தனாவின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாமல், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உயர்வையும் வளர்ச்சியையும் சேர்த்தே குறிக்கின்றன.
இன்றைய இளம் வீராங்கனைகளுக்கு அவர் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அவர் திகழ்கிறார்.

தலைமைப் பண்பு!
பேட்டிங் திறமைக்கு மேலாக, ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்திய அணியில் முக்கியமான தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஹர்மன்ப்ரீத் கவுர் காயமடைந்தபோது, இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார்.
அப்போது வெறும் 22 வயது 229 நாள்களில் இருந்த மந்தனா, இந்திய மகளிர் அணியின் இளம் T20 கேப்டன் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இது ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டையும் உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகும்.

WPL கேப்டன்சி:
மகளிர் ஐ.பி.எல் என்று அழைக்கப்படும் Women's Premier League (WPL) 2024-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மந்தனா, தனது அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
ஆடவர் ஐ.பி.எல்லில் இந்த ஆண்டு சீஸனில்தான் முதல்முறையாக பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் மந்தனா.
தற்போது இந்தியா, இலங்கை சேர்ந்து நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாதனைகள் தொடர வாழ்த்துகள் மந்தனா!