Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
Ashwin: ஷமி- அகர்கர் பிரச்னை; இதுதான் காரணம்- அஷ்வின் பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி தனது உடல் தகுதியை நிரூபித்த பிறகும் ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படவில்லை.
இதற்கு முன்பு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசிய முகமது ஷமி, அஜித் அகர்கரை கடுமையாக சாடியிருந்தார்.

"நான்கு நாள் நடைபெறும் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடினால் என்னால் கண்டிப்பாக 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும்.
எனக்கு உடல் தகுதி பிரச்னை இருக்கிறது என்று நீங்கள் (பிசிசிஐ) நினைத்தால், எப்படி என்னால் பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முடிந்திருக்கும்.
உடல் தகுதி குறித்து அப்டேட்டை அஜித் அகர்கருக்குக் கொடுப்பது என்னுடைய வேலை கிடையாது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ரவிசந்திரன் அஷ்வின், " இந்திய கிரிக்கெட்டில் அனைத்தும் மறைமுக பேச்சுவார்த்தையில் தான் நடக்கிறது என்ற விஷயத்தை நான் வெளிப்படையாகச் சொல்வேன்.
இது மாற வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்வுக்குழு மற்றும் வீரர்கள் ஆகிய இரு தரப்பிடமும் மாற்றம் வேண்டும்.
ஏனெனில் ஏதேனும் விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டால் அது செய்தியாக வெளி வருகிறது.
அது பிரச்னைகளையே ஏற்படுத்தும். ஷமி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்த பிறகு தான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

இதனால் அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஏனெனில் அவரிடம் தேர்வுக்குழு தெளிவாக எதையும் சொல்லவில்லை.
விரைவில் அவரிடம் தொலைபேசியில் பேசுகிறேன் என்று அகர்கர் சொன்னதை நான் விரும்புகிறேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஷமியை அகர்கர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விளக்கத்தை அளித்திருப்பார் என நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.