Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு!" - விஷ்ணு ...
கோவை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அநீதி - தனியார் பல்கலைக்கழக மசோதாவுக்கு எதிராக போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளை, தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் செஞ்சிலுவைச் சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, சிஐடி தொழில்நுட்பக் கல்லூரி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முன்பு மாணவ, மாணவிகளிடம் துண்டறிக்கை கொடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், “தனியார் பல்கலைக்கழக மசோதா சமூக நீதிக்கும், ஏழை மாணவர்களுக்கும் எதிரானது. அரசாங்க சொத்தைத் தாரை வார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இட ஒதுக்கீடு குறைந்துவிடும்.

இந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசால் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இனி அவர்களின் வாழ்வும் கேள்விக்குறியாகிவிட்டது. அரசாங்கத்தின் பல்வேறு உதவிகளைப் பெற்று இந்தக் கல்லூரிகள் வளர்ந்திருக்கின்றன. ஏழைகளின் கல்லூரியை தனியார் தங்களின் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் குறிக்கோளாக உள்ளது.
மசோதாவில் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 65 சதவிகித மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவிகிதமாக இருந்த அரசு ஒதுக்கீடு, தற்போது 65 சதவிகிதமாகக் குறைவது ஏழை மாணவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி. பொறியியல் கல்லூரிகள், விவசாய கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து இந்த சட்ட மசோதாவில் தெளிவுபடுத்தவில்லை.

கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது பிஎஸ்ஜி அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரியை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் அறிவிப்புக்கு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தினோம். அதை உணர்ந்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அந்த முடிவை கைவிட்டார். அதைப்போல தனியார் பல்கலைக்கழக மசோதாவை இப்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு கைவிட வேண்டும்.” என்றார்.