`வாத்தியார்'- தொடங்கி வைத்த வெற்றி மாறன்; நெகிழ்ந்த கென்| Photo Album
Doctor Vikatan: ஓவர்நைட் ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் காம்போ - ஆரோக்கியமான காலை உணவா?
Doctor Vikatan: நான் தினமும் இரவில் ஆர்கானிக் ஓட்ஸ், சியா சீட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மறுநாளுக்கு காலை உணவாக எடுத்துக்கொள்கிறேன். காலையில் அத்துடன் சிறிது தேனும் கலந்துகொள்கிறேன். இது சத்தான உணவா, இதனால் ஆரோக்கியம் கிடைக்குமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஓட்ஸை இரவில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மிகவும் ஆரோக்கியமானது. அதில் நார்ச்சத்து மிக அதிகம் என்பது முக்கியமான காரணம்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளில் ஓட்ஸும் முக்கியமானது. அதிலுள்ள பீட்டா குளுக்கன், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். அதன் மூலம் இதயநலன் உறுதிசெய்யப்படுகிறது.
சிலவகை கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டால், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அது நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு நல்லதல்ல. ஓட்ஸ் உணவுகளைச் சாப்பிடும்போது அந்தப் பிரச்னை வருவதில்லை.
சியா சீட்ஸ் என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள விதை. அது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. இதிலும் நார்ச்சத்து மிக அதிகம். சியா சீட்ஸில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் மிக அதிகம். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது.
பாதாம், சியா சீட்ஸ் போன்றவற்றை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவை ஊறிப் பெரிதாகும். அவற்றைச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். நீண்ட நேரத்துக்குப் பசி எடுக்காது. மலச்சிக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும்.

ஆக, ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் என்ற காம்பினேஷன் உண்மையிலேயே மிக ஆரோக்கியமானது. செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் வைத்திருக்கும். முழுமையான சத்துகளைக் கொடுக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் நல்ல சாய்ஸ்.
சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, உடனடியாக எனர்ஜி கிடைத்தது போல உணர்வீர்கள். சிறிது நேரத்தில், எனர்ஜி குறைந்தது போல ஆகிவிடும். ஆனால், இந்த ஓட்ஸ்-நட்ஸ் காம்போவில் அந்தப் பிரச்னை இருக்காது. இந்த உணவில் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். அது உடல் பலவீனம் இல்லாமல் வைத்திருக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் தேன் கலந்தும் சாப்பிடலாம். உங்களுக்கு நீரிழிவு இருந்தாலோ, எடையைக் குறைக்க வேண்டும் என்றாலோ, தேன் உள்ளிட்ட எந்த இனிப்பையும் தவிர்ப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















