`அந்த கார் கலரை எம்.ஜி.ஆர் கலர் என்றே சொல்வார்கள்’ - புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர...
சபேஷ் மறைவு: ``அப்பாவ பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு" - ஶ்ரீகாந்த் தேவா
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தனது சித்தப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்திய தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தனது சித்தப்பா சபேஷின் மறைவு குறித்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா, ``சபேஷ் சித்தப்பா என்னோட குரு. முதன்முதலா என் விரலைப் பிடித்து அவர்தான் கீபோர்ட் சொல்லிக்கொடுத்தாரு.
என்னோட சித்தப்பாவையும் குருவையும் நான் இழந்துட்டேன். அவருக்கு நான் ஒரு மகன்தான். என்னை ரொம்ப பத்திரமா பார்த்துப்பாரு.
கீபோர்ட்ல அவரோட விரல்களைப் பார்த்துதான் ஒரு கீபோர்ட் பிளேயராகணும்னு நான் நெனச்சேன்.
மூணு நாளைக்கு முன்னாடி ஒரு ரிஹர்சல்ல ஒண்ணா பேசிட்டு இருந்தோம். இப்போ அவர் இல்ல என்பதை நம்பவே முடியல.
அப்பாவ (தேவா) பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு. குடும்பமாவே நாங்க ஒடஞ்சிட்டோம். அப்பாவோட கான்செர்ட்ல ஒரு சிங்கமா வந்து பாடுவாரு.
இதுக்கப்றம் எங்க நாங்க பார்க்கப்போறோம்னு ரொம்ப வருத்தமா இருக்கு. இசையமைப்பாளரா 40 படங்கள் கிட்ட பண்ணிருக்காரு.

அவரோட `ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அப்பா அம்மா (தவமாய் தவமிருந்து)' சாங் கேக்கும்போதே கண் கலங்கும்.
இப்போகூட டியூட் படத்துல சரத்குமார் சாருக்கு போட்ருந்த `மயிலாப்பூர் மயிலே மயிலே' பாட்டு அவர் பாடுனதுதான். அவரின் இழப்பு எங்க குடும்பத்துக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கு" என்று கூறினார்.
சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம் உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.













