Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம...
`அந்த கார் கலரை எம்.ஜி.ஆர் கலர் என்றே சொல்வார்கள்’ - புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பயன்படுத்தி, ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக அவரின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் கார், தற்போது சி.கே. ஆட்டோமொபைல் பெயிண்டிங் வர்க்ஷாப்பின் துணையுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
1976-ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் அம்பாசிடர் மார்க் 2 மாடல் வெர்டிகோ நீல நிறக் காரை வாங்கினார். அப்போது தொடங்கி அவர் தமிழக முதல்வராக சேவையாற்றிய பத்து ஆண்டுகள் கடந்து அவர் மண்ணுலகில் இருக்கும் வரை இந்த காரை பயன்படுத்தியுள்ளார்.

முதல்வராக பல அலுவலகப் பணிகளுக்கும் அவர் இந்தக் காரையே பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பின் 1990களில், சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லத்தில் பொதுமக்களின் காட்சிக்கு அவரது கார் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 25 ஆண்டுகளாக நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கார், நிறம் மங்கிப் போனதையடுத்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் சி.கே. ஆட்டோமொபைல் பெயிண்டிங் வர்க்ஷாப் உரிமையாளரான சந்திரசேகர் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
1990 களில் தொழிலாளியாக இந்த தொழிலுக்கு வந்த சந்திரசேகர் 2008 - ஆம் ஆண்டு சொந்தமாக சி.கே. வர்க்ஷாப்பை தொடங்கியுள்ளார். பல பிரபலங்கள் இவரின் வர்க்ஷாப்பில் தங்கள் கார்களை புதுப்பிக்க ஓட்டுனர்கள் மூலமும் இடைத்தரகர்கள் மூலமும் அணுகி புதுப்பித்திருப்பதாக கூறுகிறார் சந்திரசேகர்.




எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரை புதுப்பிக்கும் அனுபவத்தைப் பற்றி சந்திரசேகர், "எவ்வளவோ கார்களை புதுப்பித்திருந்தாலும், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரை புதுப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் அளித்தது. இதில் என்னோடு சேர்ந்து உழைத்த அனைவரும், அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள்" என்று கூறினார்.
மேலும் இந்தக் கார் புதுப்பிப்பில் அவர் சந்தித்த சவால்களை பற்றி கேட்டபோது, " கடந்த இரண்டரை மாதங்களாக இந்தக் காரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம், பொதுவாகக் கார்களை புதுப்பிப்பது இவ்வளவு நாள் பிடிக்காது. ஆனால் இது மிகவும் பழைய காராக இருந்தது. இதற்கு முன்பு எத்தனை முறை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கிறதென்று நமக்குத் தெரியாது. பொதுவாகக் கார்கள் புதுப்பிக்கப்படும்போது தின்னர் என்று ஒரு திரவம் பயன்படுத்தப்படும். ஆனால் இவ்வளவு பழைய காரில் அந்தத் திரவம் பயன்படுத்தும்போது பெயின்டில் வெடிப்புகள் ஏற்பட்டுக் கொப்பளிக்கும். அதனால் நாங்கள் ஒவ்வொருமுறையும் பெயின்டைக் காய விட்டு மிகவும் பொறுமையாகக் கையாளவேண்டியதாக இருந்ததுதான் இரண்டரை மாதங்கள் பிடித்ததற்குக் காரணம்.
ஆனாலும், இன்னும் பதினைந்து வருடமாவது தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுத் தரமாகவே புதுப்பித்திருக்கிறோம்" என்றார்.

கூடுதலாக எம்.ஜி.ஆரின் காருக்கு அடிக்கப்பட்ட வெர்டிகோ நீலம் மிகவும் பிரபலமான நிறம் என்றும், அதனை எம்.ஜி.ஆர் கலர் என்று தான் அழைப்பார்கள் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் பலரும் இந்த நிறத்தைத் தங்கள் கார்களுக்கு அடித்துக்கொள்வார்கள் என்று கூறியதோடு, "டி.எம் எக்ஸ் 4777" என்ற அந்தக் காரின் பதிவு எண் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததாகக் கூறினார்.
நிறைவாக, கடந்த இரண்டரை மாதங்களாக புதுப்பிப்பு பணியில் இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அம்பாசிடர் கார், நேற்றைய தினம் (அக்.23) பணிகள் முடிந்து தியாகராய நகர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
- கோகுல் சரண்




















