சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' - பிரியாமணி
இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க" - பாக்யராஜ்
பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் நேற்று (அக்டோபர் 23) காலமானார்.
இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்', 'பொக்கிஷம்', 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', 'கோரிப்பாளையம்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர்.
இவற்றை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார்.
68 வயதாகும் சபேஷ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாக்யராஜ், சபேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாக்யராஜ், "திறமைசாலிகள் நம்மைவிட்டு பிரியும்போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

சபேஷ் அவர்கள் ரொம்ப அமைதியாக இருப்பார். என்னுடைய படங்களில் எல்லாம் பணியாற்றும்போது அவர் அதிகமாகப் பேசி பார்த்தது இல்லை.
அதேபோல் தேவா சார் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளின் ஒற்றுமை எல்லோருக்கும் நெகிழ்வான ஒரு விஷயமாக இருக்கும்.
அவர் படங்களுக்கு இசை அமைத்தது மட்டும் அல்லாமல்... ரஹ்மான் எங்கையாவது வெளியூர் சென்றால் சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு திறமை இருந்தது.
அவரின் இறப்பு மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.















