சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' - பிரியாமணி
"திரையுலக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரை இழந்துட்டோம்" - ஆர்.வி.உதயகுமார், பேரரசு இரங்கல்
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் சபேஷ் உடலுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.வி. உதயகுமார், ``தேவா சார் சகோதரர்கள் பஞ்சப் பாண்டவர்கள் மாதிரி. தேவா, சபேஷ், முரளி, சம்பத், சிவா ஆகிய ஒற்றுமையான சகோதரர்களில் ஒருத்தரை இன்னைக்கு இழந்துட்டோம்.
கீபோர்டிலும், புரோகிராம் செய்வதிலும் சபேஷ் ரொம்ப கெட்டிக்காரர். இந்த நாலு பேரும் சேர்ந்ததுதான் தேவா.
தேவாவின் வெற்றிகளில் முக முக்கியமான தூணாக இருந்தவர் சபேஷ். அவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு.
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டாலும், பின்னாடி எங்க பார்த்தாலும் தேனிசை தென்றல் தேவானு மிகப்பெரிய கொடியை ஏற்றுவதற்கு காரணமானவர்களில் அவரும் ஒருத்தர்.
தேவா சாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. அவர் ரொம்ப எளிமையானவர்.
தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக வந்தபோதும் சாதாரணமாக இருந்தார்.
நல்ல மனிதர், எல்லோரையும் நேசிக்கக்கூடியவர். சேரனின் `பொக்கிஷம்' படத்தில் மிக அற்புதமான பாடல்களைக் கொடுத்திருப்பார்" என்று கூறி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, ``சபேஷ் சாரின் இறப்பு செய்தி கேட்டு ரொம்ப அதிர்ச்சிக்குள்ளாகிட்டோம். மகாபாரதத்துல எப்படி பஞ்ச பாண்டவர்களின் ஒற்றுமையோ, அதேபோல திரையுலகில் தேவா சாரின் சகோதரர்களின் ஒற்றுமை எல்லோருக்கும் உதாரணமானது.
இவர்களிடத்தில் எந்த ஈகோவுமே இருக்காது. என்னோட பெரும்பாலான படங்களுக்கு தேவா சார் பையன் ஸ்ரீகாந்த் தேவாதான் மியூசிக்.

`தவமாய் தவமிருந்து', `பொக்கிஷம்' போன்ற படங்களுக்கு தனியாக இசையமைத்த சபேஷ் - முரளி, என்னோட படங்கள் `சிவகாசி', `பழனி' ரீ-ரெக்கார்டிங்கில் வந்து வாசிச்சிட்டு இருப்பாங்க, எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.
நாம மியூசிக் டைரக்டர் ஆகிட்டோம, திரும்ப தேவா, ஸ்ரீகாந்த் தேவா கிட்ட வாசிக்கணுமானு துளிகூட ஈகோ இருக்காது.
எல்லோருக்கும் அந்தப் பக்குவம். அண்ணன் தம்பி ஒற்றுமையாலும், பாசத்தாலும்தான் அந்த ஈகோ வராம இருந்திருக்கு. சபேஷ் சார் ரொம்ப அமைதியானவர்.
தேவா சாருக்கு மிகப்பெரிய பலம். அவரின் இழப்பு தேவா சாருக்கு மிகப்பெரிய இழப்பு. தேவா சார் இந்த நேரத்துல தைரியமா இருக்கணும்" என்று ஆறுதல் தெரிவித்தார்.















