சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' - பிரியாமணி
`நீட் தேர்வு போலி சான்றிதழ் தயாரித்த மாணவி, சிக்கியது எப்படி?' - அதிர்ச்சி தகவல்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதர் ( 55) . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி (47). மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி 19. பிளஸ் 2 படித்து முடித்த இவர், மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் காருண்யா ஸ்ரீதர்ஷினி 228 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், எப்படியாவது மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் 456 மதிப்பெண்கள் எடுத்தாக போலியான சான்றிதழ் ஒன்றை தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காருண்யா ஸ்ரீதர்ஷினி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அப்பா சொக்கநாதர், அம்மா விஜய முருகேஸ்வரி 3 பேரையும் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நம்மிடையே பேசிய அதிகாரிகள் சிலர், “ நீட் தேர்வில் தோல்வியடைந்த காருண்யா நண்பர் ஒருவரின் உதவியால் நீட் தேர்வில் தேர்வான மாணவியின் மதிப்பெண் சான்றிதழை வாங்கி தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை அதில் வைத்து எடிட் செய்துள்ளார். நீட் தேர்வு மையத்தின் மின்னஞ்சல் முகவரியின் ஒரு எழுத்தை மாற்றி புது மின்னஞ்சல் தயாரித்து அதில் தான் தயாரித்த போலிச் சான்றிதழை இணைத்து அதிலிருந்து தன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த மதிப்பெண் சான்றிதழுடன் முதலில் கன்னியகுமாரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார். அந்த கல்லூரி நிர்வாகத்தினர் போலி சான்றிதழ் தயாரித்துள்ளார் என்று கண்டுபிடித்து உடனே ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எப்ஐஆர் ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். ஆனால் அங்கிருந்து எப்படியோ தப்பிய காருண்யாவும் அவரது குடும்பத்தினரும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு அட்மிசனுக்கு பெற்றோருடன் சென்றுள்ளார்.

அங்கு காருண்யாவிற்கு சீட் கொடுத்து அட்மிஷன் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீதர்ஷினி, நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்திருக்கிறார்கள்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., பிரதீப்பிடம் விளக்கம் கேட்டோம், “ இந்த விவகாரம் குறித்து தெரிய வந்ததுமே உடனே அந்த குடும்பத்திடம் விசாரணை செய்து காருண்யா ஸ்ரீதர்ஷினி மற்றும் அவருடைய பெற்றோரை கைது செய்து விட்டோம். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த போலி சான்றிதழ் வழக்கு தான் முதன்முறையாக நடந்துள்ளது. இதில் முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். நீட் தேர்வு போலி சான்றிதழ்கள் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.















