`கருப்பு பட அப்டேட்; மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' -ஆ...
Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா?
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோற்றிருக்கிறது. தொடரை இழந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கோலியும் ரோஹித்தும் ஆடவில்லை.

கோலி இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருக்கிறார். ரோஹித் தட்டுத் தடுமாறிதான் ஆடியிருக்கிறார். இதை வைத்துக் கொண்டு கோலியையும் ரோஹித்தையும் தோனியோடு ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வருகின்றனர். 2019 இல் 38 வயதில் தோனி ஆஸ்திரேலியாவில் ஓடிஐ தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். தோனி எப்படி அந்தத் தொடரில் ஆடினார்? எப்படி தொடர் நாயகன் விருதை வென்றார்?
2018 இன் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. ஓடிஐ தொடர் 2019 ஜனவரியில் நடந்திருந்தது. அதே ஆண்டின் ஜூன் மாதத்தில் ஓடிஐ உலகக்கோப்பை நடந்திருந்தது. எனவே அந்த உலகக்கோப்பைக்கு முன்பான தொடர் என்பதால் அந்தத் தொடர் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தோனி 2017 தொடக்கத்திலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார். தோனியின் ஆகச்சிறந்த ஆட்டங்களும் அதன்பிறகு அவரிடமிருந்து வெளிப்படவில்லை. 2018 இல் ஓடிஐக்களில் 275 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

2019 உலகக்கோப்பைதான் தோனிக்கு கடைசியாக இருக்கும். அத்தோடு அவர் ஓய்வை பெறுவார் எனும் பேச்சுகள் அப்போதே எழத் தொடங்கியிருந்தது. மேலும், நம்பர் 4 இல் யாரை இறக்கலாம் எனும் குழப்பமும் இந்திய அணிக்கு இருந்தது. அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கேதார் ஜாதவ் என பலரையும் அந்த இடத்தில் பயன்படுத்தியிருந்தனர். தோனி நம்பர் 5 இல் இறக்கப்பட்டு வந்தார். நம்பர் 4 செட் ஆகாத நிலையில், மிடில் ஆர்டரில் தோனி தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆடியே ஆக வேண்டிய தேவை இருந்தது. இப்படியொரு சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓடிஐ தொடரில் தோனி இறங்கினார்.
சிட்னி மேட்ச்
அந்தத் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடந்திருக்கும். இந்திய அணி தோற்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டியிலும் தோனி அரைசதம் அடித்திருப்பார். 96 பந்துகளில் 51 ரன்களை அடித்திருந்தார். எதோ டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியதை போல இருக்கும். ஆனால், அந்தப் போட்டியில் தோனி அப்படித்தான் ஆட வேண்டியிருந்தது. ஏனெனில், இந்திய அணிக்கு 289 ரன்கள் டார்கெட். ஆனால், இந்திய அணி 4-3 என மிக மோசமான நிலையில் இருந்தது. ஜை ரிச்சர்டசன் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார். அந்த இக்கட்டான சூழலில் இறங்கி, மேற்கொண்டு விக்கெட் விழாமல் ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் போட்டு 137 ரன்களை சேர்த்திருப்பார். போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், ஒரு சவாலை கொடுக்க தோனியின் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாக இருந்தது.
அடிலெய்ட் போட்டி
அடிலெய்டில் அடுத்த போட்டி. இந்த முறை டார்கெட் இன்னமும் அதிகம். இந்திய அணி 299 ரன்களை எடுக்க வேண்டும். கோலிக்கு பிடித்த மைதானம் என்பதால், வழக்கம்போல அவர் நின்று ஆடி சதமடித்திருப்பார். இந்தப் போட்டியிலும் தோனி மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அமைத்திருப்பார். கோலியுடன் சேர்ந்து 82 ரன்களையும் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து 57 ரன்களையும் சேர்த்திருப்பார்.
கடைசி ஓவரில் 7 ரன்களை அடிக்க வேண்டும் எனும் நிலைக்கு போட்டி சென்றுவிடும். பெஹ்ரண்டாப் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து டென்ஷனை குறைத்து அடுத்த பந்தில் கூலாக சிங்கிள் தட்டி போட்டியை வென்று கொடுத்திருப்பார் தோனி. 54 பந்துகளில் 55 ரன்களை எடுத்திருப்பார். கிட்டத்தட்ட பழைய மைக்கேல் பெவன் ஸ்டைலில் ஓடி ஓடி கால்குலேட்டடாக ஆடி க்ளாஸாக போட்டியை வென்று கொடுத்திருப்பார்.
மெல்பர்பனில் மூன்றாவது போட்டி!
இதை வெல்லும் அணி தொடரையும் வெல்லும். இந்தப் போட்டியிலும் இந்திய அணி வேகமாக 2 விக்கெட்டுகளை இழந்திருக்கும். இங்கேயும் தோனி தனது அனுபவத்தை வெளிக்காட்டி மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தார். கோலியுடன் சேர்ந்து 54 ரன்களையும் கேதார் ஜாதவுடன் சேர்ந்து 121 ரன்களையும் அடித்திருந்தார். 87 ரன்களை அடித்து கடைசி வரை நின்று போட்டியையும் வென்று கொடுத்திருந்தார்.

அந்த மூன்று போட்டிகளிலுமே தோனி அரைசதத்தை அடித்திருந்தார். அதைவிட முக்கியமாக ஒரு முனையில் நின்று விக்கெட் விழாமல் பெரிய பார்ட்னர்ஷிப்களையும் அமைக்க உதவியிருந்தார். தோனிக்கு அப்போது 38 வயது. அவரின் பார்மெல்லாம் எப்போதோ மங்கிவிட்டது. ஆனால், அவர் தன்னுடைய வயதுக்கும் திறனுக்கும் ஏற்ற வகையில் ஆட்டத்தை மாற்றியிருந்தார். தன்னுடைய முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு செகண்ட் பிடில் ஆடியிருந்தார். அணியின் தேவையைப் பொறுத்து மற்ற வீரர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடியிருந்தார். அதுதான் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருந்தது. தோனிக்கு தொடர் நாயகன் விருதையும் வென்று கொடுத்திருந்தது.



















