சண்டி ஹோமம்: சங்கல்பித்த 48 நாளில் வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்
மகாராஷ்டிரா: போலீஸ் SI-ஆல் பாலியல் வன்கொடுமை; உயிரை மாய்துக்கொண்ட பெண் மருத்துவர்!
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பால்தான் என்ற பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளரால் (SI) தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோபால் பத்னே என்ற உதவி ஆய்வாளர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதே இந்த முடிவுக்குக் காரணம் என தனது இடது கையில் எழுதி வைத்துக்கொண்டு கடந்த அக்டோபர் 23 வியாழக்கிழமை இரவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

"காவல் ஆய்வாளர் கோபால் பத்னேதான் என் மரணத்துக்குக் காரணம். அவர் என்னை நான்குமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். கடந்த ஐந்து மாதங்களாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்" என அதில் எழுதப்பட்டிருக்கிறது.
கோபால் பத்னே தற்போது பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பால்தான் வட்டார மருத்துவமனையில் பணிபுரியும் அவர், சில மாதங்களுக்கு முன்னதாகவே பால்தான் காவலர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளை எதிர்கொள்வதாக துணை காவல் கண்காணிப்பாளருக்கு (DSP) பால்தானில் உள்ள துணைப்பிரிவு காவல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜூன் 19ம் தேதி டி.எஸ்.பி-க்கு அவர் எழுதிய கடிதத்தில், பால்தான் கிராமப்புற காவல்துறையைச் சேர்ந்த 3 காவலர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த கடிதத்தில் பத்னே உடன் துணைப்பிரிவு காவல் ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் லாட்புத்ரே ஆகியோரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அலையை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்தேவ்ராவ், "காவல்துறையினரின் கடமை பாதுகாப்பதுதான், ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரை சுரண்டினால், எப்படி நீதி நிலைநாட்டப்படும்? அந்த பெண் முன்னதாகவே புகார் அளித்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையினரைப் பாதுகாக்கிறது, அதுதான் போலீஸ் அராஜகத்துக்கு காரணம்.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். முந்தைய புகாருக்கு கவனம் செலுத்தாத அல்லது காவலர்களை பாதுகாத்த அனைவரும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்." என விமர்சித்துள்ளார்.




















