`கருப்பு பட அப்டேட்; மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' -ஆ...
எவரெஸ்ட் 'Death Zone'-ல் தவித்த ஆஸ்திரேலியப் பெண் - உடல் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்!
இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சையை எதிர்கொண்டபோது, அச்சோகம் நடைப்பெற்றது. சிகரத்தின் உச்சியை அடைய வேண்டிய முயற்சியில் அவர் எவரெஸ்டின் மிகவும் அபாயகரமான பகுதியான 'மரண மண்டலத்தில்' (Death Zone) கிட்டத்தட்ட நான்கு நாட்கள் செலவழித்தார்.
இந்தப் போராட்டத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, அவர் வெளியிட்ட ஒரு கண்ணீர்த் துளிகள் நிறைந்த வீடியோ மலையேற்றத்தின் கடுமையான பக்கங்களை உலகிற்கு உணர்த்தியுள்ளது. 22 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள அந்த அதிர்ச்சிப் பதிவு 'சாகசம்' என்ற பெயரில் ஒரு மனித உயிர் அனுபவிக்கும் சித்திரவதையை வெளிப்படுத்தியுள்ளது.
உச்சிக்கு வெறும் 400 மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 8,450 மீட்டர் உயரத்தில், ஆக்ஸிஜனின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் மரண மண்டலத்தில், ஒவ்வொரு மூச்சும் மரணத்தின் வாசலைத் தொட்டு மீண்டு வரும் போராட்டமாகும்.

சிகரத்தை அடைந்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் போராடிய பியான்கா, இறுதியில் பல காரணங்களால் பின்வாங்கினார். பேஸ் கேம்புக்குத் திரும்பிய பிறகு, அவருடைய முகம் கடுங்குளிரால் சிவந்து வீங்கி, மூச்சுத் திணறலுடன் காணப்படும் வீடியோ பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது.
அவர், "என் நுரையீரல் மற்றும் தொண்டை மிகவும் புண்ணாகியுள்ளது. இன்று மோசமாக உணர்கிறேன்," என்று கூறியது, மரண மண்டலம் ஏற்படுத்திய உடல் மற்றும் மன உளைச்சலை பதிவு செய்தது.
பியான்கா சிகரத்தை அடையவில்லை; ஆனால், அவர் சாதித்தது சிகரத்தை அடைந்ததை விடப் பெரியது, அவர் பிழைத்துவிட்டார்! ஏனெனில், மரண மண்டலத்தில் ஏற்பட்ட கடும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், அவருக்குக் கை, கால்களில் உணர்ச்சி குறைதல் (Frostbite), நுரையீரல் திரவம் சேரும் அபாயகரமான நோயான HAPE (High Altitude Pulmonary Edema) போன்ற அறிகுறிகள் இருந்தன. இந்த அறிகுறிகளைக் கடந்து, உடல் கொடுத்த எச்சரிக்கைக்கு மதிப்பு கொடுத்து, உயிரின் மதிப்பை உணர்ந்ததுதான் பியான்காவின் நிஜமான வெற்றி. எவரெஸ்டில் ஒவ்வொரு ஆண்டும், உச்சியைத் தொட வேண்டும் என்ற பிடிவாதத்தால் பல மலையேற்ற வீரர்கள் உயிர் துறக்கும் நிலையில், பியான்காவின் இந்தத் 'தோல்வி' மனிதத்தின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
தேவைக்கு அதிகமாக மலையேற்ற வீரர்கள் குவிவது, மரண மண்டலத்தில் நெரிசலை உருவாக்குகிறது, இது கால விரயம், ஆக்ஸிஜன் விரயம், இறுதியில் உயிர்ப்பலி! ஒரு இளம் பெண்ணின் இந்தத் துயரக் கதை, இந்த அனுபவம், எதிர்காலச் சாகச விரும்பிகளுக்கு, மலையின் அபாயங்களைப் பற்றிய ஆழமான புரிதலையும், கடுமையான உடல் தகுதியுடன் மட்டுமே எவரெஸ்டை அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
"எவரெஸ்ட் சிகரத்தில் மனித உடல் இவ்வளவு கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை" என்று பலர் அதிர்ச்சியடைந்தனர். பியான்காவின் துணிச்சலைப் பாராட்டியபோதும், உயிரைக் காப்பாற்றியதே மிகப்பெரிய சாதனை எனப் பெரும்பாலானோர் குறிப்பிட்டனர்.


















