`கருப்பு பட அப்டேட்; மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' -ஆ...
ஒரு டிக்கெட் 4 ரூபாய்! - ரஜினி, கமல் படத்தை தவிர்த்து விட்டு லட்சுமி படம் பார்த்த கூல் அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தீபாவளி அன்று திரைப்படம் பார்த்த அனுபவத்தை கிட்டத்தட்ட 43 வருடம் கழித்து என்னுடைய நினைவுக்கு இனிமையாக மீட்டெடுக்கச் செய்த தங்களுக்கு மிகுந்த நன்றி.
தீபாவளிக்கு பலகாரம் செய்வதும் துணிகள் எடுப்பதும் பட்டாசு கொளுத்துவதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதும் தான் குடும்பப் பெண்களுக்கான வேலைகள் கடமைகள் என்று ஏதோ சொல்லலாம். 1983 ஆம் வருடம் தீபாவளி அன்று எனது கணவர் இரு பெண் குழந்தைகளுடன் (9 வயது 4 வயது) கொண்டாடி முடித்தவுடன் எனது தோழிகள் கல்பனா, மற்றொரு தோழி செல்வியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.
எல்லாருமே என் வயது ஒத்தவர்கள் தான். எனக்கு 26 வயது. எனக்கு 15 வயதில் திருமணம் ஆனதால் இரண்டு பெண் குழந்தைகள் (உங்கள் சந்தேகம் தீ ர்ந்திருக்கும்) மற்ற தோழிகள் இருவர் மணம் ஆகாதவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அன்றைய காலகட்டத்தில் தீபாவளி ரிலீஸ் படங்கள் எல்லாம் தினசரி நாளிதழில் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்.

இன்று போல் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலம். நாங்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்று தீபாவளி ரிலீஸ் படம் போகலாமா என்று சொல்லி செல்வி கேட்க கல்பனா ரஜினியின் `தங்க மகன்' போகலாமா? செல்வியோ `தூங்காதே தம்பி தூங்காதே' கமல் படம் போகலாம் என்று கேட்டாள்.
நான் உடனே வேண்டாம் பா நிறைய கூட்டம் இருக்கும் டிக்கெட் எடுக்க முடியாது அப்பதெல்லாம் ரிசர்வேஷன் கிடையாது. அடிச்சு புடிச்சு கவுண்டர்ல போயி டிக்கெட் வாங்கிட்டு வரணும் ரஜினி கமல் படங்களுக்கு போனோம்னா மன்னன் படத்துல ரஜினியும் கவுண்டமணியும் சினிமா டிக்கெட் எடுக்க போய் சட்டை கிழிந்து வெளியே வருவார்கள் அந்த மாதிரி கதையாகிவிடும் வேண்டாம்.
வேறு என்ன படம் ரிலீஸ் ஆயிருக்கிறது என்று பார்ப்போம் என்று பேப்பரை பார்த்துக் கொண்டே வந்த போது லட்சுமி நடித்த `உண்மைகள்' திரைப்படம் போட்டிருந்த உடன் லட்சுமி நடித்த படம் என்ன படமாக இருந்தாலும் போய்விடலாம் என்று நினைப்போம் நாங்கள்.
நாம் இன்று தீபாவளி தினத்தன்று ஏதோ ஒரு படத்துக்கு போகணும் அவ்வளவுதானே என்று பேசி முடிவெடுத்த உடனே என்னவர், போய் வா நீ இதுவரை தீபாவளி என்று சினிமாவே பார்த்ததில்லை என்று புலம்பி கொண்டு ஏதோ பாவம் செய்ததினால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்புவாய்.
நீங்கள் எனக்கு கிடைத்தது மட்டும் என்னவாம் இது என்னோட மைண்ட் வாய்ஸ். நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல கல்பனாவின் அம்மாவோ என்னவோ நீங்கள் பண்ணுங்கள் இதெல்லாம் நல்லாவே இல்லை என்று சொல்லிவிட்டார் நல்ல நாளும் அதுவுமா வீட்டை விட்டு சினிமாவுக்கு போவார்களா? ப்ளீஸ் என்று கெஞ்சியவுடன் ஓகே சொல்லிவிட்டார்கள்.
செல்வி வீட்டில் உடனே பர்மிஷன் கிராண்டட். என் சின்ன பெண்ணோ நானும் சினிமாவுக்கு வருவேன் என்று ஒரே அடம். அவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அப்போது டிவி செல்போன் எதுவும் இல்லாத காலம்.

தங்கமே நீ சமத்தா இரு. ஹோம் ஒர்க் இன்னைக்கு பண்ண வேண்டாம் என்று அவளுக்கு பிடித்ததை சொல்லி உடனே கிளம்பி விட்டோம். மணி பகல் 12. அப்போதெல்லாம் எங்கள் ஏரியாக்களில் ஆட்டோக்கள் நிறைய கிடையாது. சைக்கிள் ரிக்ஷா தான்.
அதுவும் தீபாவளி அன்று கூப்பிட்டால் நமக்கு பெரிய தலைவலி என்று டவுன் பஸ் பிடித்து ஜூபிடர் தியேட்டர் என்று நினைக்கிறேன். போய்விட்டோம் 12 .30 மணிக்கு எல்லாம் தியேட்டர் வாசலில் நிற்கிறோம். என்னடி கூட்டமே இல்லை. படம் ஓடுகிறதா? ஓடிப் போயிடுச்சா? அப்படின்னு கேட்டுக்கிட்டே உள்ள போய் அங்க தரையை கூட்டிட்டு இருந்த ஆயாவிடம் படம் விட்டு விட்டார்களா? காலை ஷோ நடக்குதா என்று கேட்டோம்.
அந்த அம்மா எங்கள் மூவரையும் ஒரு பார்வை. அதில் ஆயிரம் அர்த்தம். அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. எங்களுக்கு. அந்த அம்மா பதில் தேவை நமக்கு இப்போது. படம் ஓடிட்டு இருக்கு ஒன்றரை மணிக்கு தான் அடுத்த ஷோ ஆரம்பிக்கும். அப்பால போய் குந்துங்கள் என சொன்ன உடனேயே எங்களுக்குள் ஒரு மின்னல். ஆகா இன்று எப்படியும் சினிமா பார்த்து விட்டு தான் வீட்டுக்கு. அரை மணி ஆயிற்று .
உள்ளே ரிங் என்று பெல் அடிக்கும் சத்தம். அப்போதெல்லாம் ஏசி தியேட்டர் கிடையாது. உள்ளேயிருக்கும் கதவை திறந்தால் படத்தில் பேசும் வசனங்கள் கூட வெளியில் நிற்பவர்களுக்கு காதில் கேட்கும். நாங்கள் டிக்கெட் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் அருகே இரண்டு வரிசைகள் கம்பியில் இருக்கும். அதில் பெண்கள் வரிசையில் முதல் ஆளாக கடைசி ஆளும் நாங்கள் மூவர்தான் நின்று கொண்டோம். அன்றைய தீபாவளி அன்று பொட்டு மழை கூட இல்லை. சுள்ளென்ற வெயில்.
வெயில் அடித்தால் என்ன படம் பார்க்கப் போகிறோமே அதுவும் தீபாவளி என்று அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை நாங்கள். சினிமாவிற்கு வெளியே வர ஆரம்பித்தார்கள். படம் பார்த்து விட்டு வெளியே வந்ததில் ஒரு பெண் கூட இல்லை. படத்தைப் பார்த்துவிட்டு வந்த ஆண்கள் படத்தைப் பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு நல்ல படம். ஆர்.சி. சக்தி டைரக்ஷன் சூப்பர். ஐயோ லட்சுமி நடிப்பு என்னம்மா இருந்தது என்று பேசிக்கொண்டே போகவும் எங்களுக்கு கால் தரையில் பாவவில்லை.
பறப்பதா என்ற ஒரு நிலை. ஆகா தீபாவளி அன்று படத்திற்கு வந்ததும் அல்லாமல் ஒரு சிறந்த படத்திற்கு வந்திருக்கிறோம் என்ற பூரிப்பு வேறு. நமக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று பேசிக்கொண்டு டிக்கெட் கொடுக்க இருக்கும் கவுண்டரின் மரக்கட்டையை எப்போது திறப்பார்கள் என்று பார்த்துக் கொண்டே இருந்தோம்.

மரக்கட்டைய திறந்தவுடன் நான் கையை விட்டு 50 ரூபாயை நீட்டினேன். மூன்று டிக்கெட் என்று. ஒரு டிக்கெட் நான்கு ரூபாய் என்று நினைக்கிறேன். சீட் வரிசை எண்களெல்லாம் கிடையாது. அவசரமாக டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பி.டி உஷா ரேஞ்சுக்கு உள்ளே ஓடிபோய் மேல் வரிசையில் உட்கார்ந்து கொண்டோம். அப்படி ஒன்றும் அடித்து பிடித்து கூட்டம் இல்லை.
மற்ற படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் வரவர அதுவும் ஃபுல் ஆயிற்று. படம் போட்ட உடன் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி சினிமா தியேட்டருக்குள் வந்து படம் பார்க்க போகும் சாதித்த பெருமையை பகிர்ந்து கொண்டோம். படமோ மிக மிக அருமை. அருமை பெண்களுக்காகவே எடுத்தது போன்று லட்சுமி நடிப்பு அபாரமாக இருந்தது.
உண்மை கதைகளை ஒட்டி எடுத்த படம் என்பதால் படம் மிக மிக அற்புதமாக இருந்தது. அருமையான படத்தை பார்த்துவிட்டு வீடு வரும்போது மாலை 5 மணி ஆகிவிட்டது வீட்டிற்கு வந்து மாலை மத்தாப்பு பட்டாசு வெடியுடன் தீபாவளியை மிக அமர்க்களமாக கொண்டாடி முடித்தோம்.
இன்று போல் ஹாட்ஸ்டார் amazon நெட்டில் படம் பார்க்கும் வசதியும் இல்லை. ஆன்லைனில் புக் செய்து போகும் வசதியும் கிடையாது. இருந்தாலும் இத்தனை வருடங்கள் கழித்து தீபாவளியன்று பார்த்த படம் இன்றும் மனதில் பசுமையான நினைவுகளுடன் இருக்கிறது. நன்றி!
அன்புடன்,
திருமதி. சந்திரா சிவபாலன்,
ஸ்ரீரங்கம், திருச்சி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















