கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற...
Cyber Crime: மும்பையை அச்சுறுத்தும் டிஜிட்டல் கைது; 218 பேரிடம் ரூ. 112 கோடி பறிப்பு; திணறும் போலீஸ்
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர்.
போலீஸார் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் மத்தியில் இது போன்ற குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதில் மும்பை மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், பெண்கள்தான் சைபர் கிரிமினல்களின் இலக்காக இருக்கிறது. மும்பையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 114 பேர் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் யாராவது டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிரா முழுவதும் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 218 பேர் டிஜிட்டல் கைது மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் ரூ.112 கோடியை சைபர் கிரிமினல்களிடம் இழந்துள்ளனர். ஆனால் அதில் வெறும் ரூ.5.5 கோடி மட்டும்தான் முடக்கப்பட்டுள்ளது. அதிலும் ரூ.1.5 கோடி மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளது என்று போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று மகாராஷ்டிரா முழுவதும் நடக்கும் இணையதள மோசடியில் கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை வரை ரூ.1056 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர். இம்மோசடியில் 3236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மும்பையில் மட்டும் 1918 மோசடிகள் நடந்து இருக்கிறது. இதில் ரூ.530 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மும்பையில் இணையதள மோசடியில் ரூ.888 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 5 ஆண்டில் மும்பை மக்கள் ஆன்லைன் மோசடியில் ரூ.2067 கோடியை இழந்துள்ளனர். இது மகாராஷ்டிரா முழுவதும் ரூ.10254 கோடியாக இருந்தது. ஆனால் இதில் வெறும் ரூ.82 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இது போன்ற மோசடிகளில் பணம் மீட்கப்படுவது மிகவும் அபூர்வமாக இருக்கிறது. வங்கிகள் விரைந்து செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே வங்கிக்கணக்கில் அடிக்கடி பரிவர்த்தனை நடந்தால் அதனைக் கண்காணிக்க வங்கிகள் தவறிவிடுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து சைபர் பிரிவு டிஐஜி சஞ்சய் ஷின்ட்ரே கூறுகையில், "'டிஜிட்டல் கைது' எப்போதும் போலியானது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு உண்மையான அதிகாரியும் ஒருபோதும் பணம் கேட்கவோ அல்லது வீடியோ அழைப்பில் உங்களை அச்சுறுத்தவோ மாட்டார்.
டிஜிட்டல் கைது என்று எதுவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தைப் பறிக்க மோசடி செய்பவர்கள் பயத்தையும் உணர்ச்சி அழுத்தத்தையும் பயன்படுத்துகிறார்கள்'' என்றார்.
இது குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தன் கூறுகையில், ''வயதான பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிபிஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்குப் பயந்து விடுகிறார்கள்.
அவர்கள் பயத்தில் அழைப்புகளைத் துண்டிப்பதில்லை. காவல்துறை சில சிறிய வழக்குகளைத் தீர்க்கிறது. ஆனால் இந்த மோசடிகளைத் தடுக்க எந்த முன்னெச்சரிக்கை திட்டமும் இல்லை" என்று அவர் கூறினார்.
சைபர் பிரிவு வழக்கறிஞர் பிரசாந்த் மாலி கூறுகையில், ''பிரச்னை தொழில்நுட்பத்தில் இல்லை, மாறாக மனித நடத்தை மற்றும் பலவீனமான வங்கி அமைப்புகளில் உள்ளது.
இன்றைய AI அடிப்படையிலான கண்காணிப்பு கருவிகள் மூலம், வங்கிகள் சந்தேகத்திற்கிடமான கணக்குகளை எளிதாகக் கண்டறிய முடியும்'' என்று தெரிவித்தார்.

சைபர் செக்யூரிட்டி நிபுணர் ரித்தேஷ் இது குறித்து கூறுகையில், ''வங்கிகள் ரிசர்வ் வங்கி விதிகளைப் புறக்கணித்தால் தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
சமீபத்தில் மும்பையில் மிகப்பெரிய டிஜிட்டல் கைது மோசடியாக 58 வயது பங்கு வர்த்தகரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.58 கோடியை சைபர் கிரிமினல்கள் பறித்தனர். இந்த மோசடி தொடர்பாக இதுவரை நாடு முழுவதும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு வங்கிக்கணக்கிற்கு இப்பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வெளிநாட்டு வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது கடந்த 14 மாதத்தில் ரூ.513 கோடி அளவுக்கு மோசடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



















