ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த ...
கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் - நடந்தது என்ன?
கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
இந்த வழக்குகள் எல்லாம், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று காலையில் முதல் வழக்குகளாக விசாரணைக்கு வந்தன.
முதல் வழக்காக கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த், முன் ஜாமீன் கோரிய மனு. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த மனுவை மனுதாரர் தரப்பு வக்கீல் வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று, அந்த மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
அதேபோல, கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, விஜய் பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தின் போது, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது, தீ விபத்து தடுப்பு கண்காணிப்பு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட போது, நேபாளம், இலங்கை போல், தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, வன்முறையை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, த.வெ.க. தேர்தல் பிரச்சார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வழக்கு, கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ. கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா? என்பதை முடிவு செய்யும் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை எல்லாம் 3 வாரத்துக்கு தள்ளிவைத்தும், அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று நீபதிகள் உத்தரவிட்டனர்.



















