`மூடப்படும் நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்;வீண் தற்பெருமை வெட்கக்கேடானது'...
Liechtenstein: விமான நிலையம், நாணயம் இல்லாத சிறிய நாடு; பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பது எப்படி?
ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதன் பரந்த நிலப்பரப்பு, ராணுவ பலம், சொந்த நாணயம் மற்றும் சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டு அளவிடுவது வழக்கம். ஆனால், சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு ஐரோப்பிய நாடு இந்த அளவீடுகளை உடைத்து, பொருளாதாரத்திற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டீன் (Liechtenstein), சொந்த சர்வதேச விமான நிலையமோ அல்லது நாணயமோ இல்லாமல் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்த நாடு, சுவிஸ் ஃபிராங்கை (Swiss Franc) தனது அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் நாணயக் கொள்கைகளை நிர்வகித்தல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பணத்தை அச்சிடுதல் போன்ற நிதிச் சுமைகளிலிருந்து லீச்சென்ஸ்டீன் விலகி இருக்கிறது.

லீச்சென்ஸ்டீனில் சர்வதேச விமான நிலையம் இல்லை என்றாலும், அண்டை நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள விமான நிலையங்களை எளிதாகப் பயன்படுத்துகிறது.
மக்கள் பொதுவாக சூரிச் (Zurich) அல்லது இன்ஸ்ப்ரூக் (Innsbruck) விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து கார் அல்லது ரயில் மூலம் நாட்டிற்குள் வருகின்றனர்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அதன் உற்பத்தித் துறை உள்ளது. தொழில்துறை உபகரணங்கள், தொழில்நுட்பப் பொருட்கள், பல் மருத்துவக் கருவிகள் மற்றும் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பாகங்கள் தயாரிப்பில் லீச்சென்ஸ்டீன் ஒரு உலகளாவிய மையமாக விளங்குகிறது.
இந்த நாட்டில் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இது அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது.




















