Bollywood: ``நாங்கள் இணைந்து நடிக்கும் படம் ?'' - ஒரே மேடையில் பாலிவுட்டின் கான்...
Sammoo : பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா?
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் பல நூற்றாண்டுகளாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மூ என்ற கிராமம்தான் இவ்வாறு பல தலைமுறைகளாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது இல்லை. இந்தக் கிராமத்தில் தீபாவளி அன்று வீடுகள் இருள் சூழ்ந்து, விளக்குகளோ, பட்டாசு சத்தமோ இன்றி காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு காரணமாக ஒரு சோகமான வரலாற்று நிகழ்வு கிராம மக்களால் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தீபாவளியைக் கொண்டாடுவதற்காக தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அப்போது மன்னரின் அவையில் சிப்பாயாகப் பணிபுரிந்த அவரது கணவர் திடீரென இறந்துவிட்டார். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவரின் சிதையிலேயே உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இறக்கும் தருவாயில், அந்தப் பெண், இந்த கிராம மக்கள் யாரும் தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று சபித்ததாகக் கூறப்படுகிறது.
அன்றிலிருந்து அந்த கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த சாபத்திற்குப் பயந்து, தலைமுறை தலைமுறையாக இந்த மரபை மக்கள் கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
யாராவது தீபாவளியைக் கொண்டாட முயன்றால், அவர்களுக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடப்பதாகவும், இழப்புகள் ஏற்படுவதாகவும் கிராமத்து பெரியவர்கள் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையின் காரணமாக, சம்மூ கிராமத்தில் வசிக்கும் மக்கள் தீபாவளி அன்று சிறப்பு உணவுகள் சமைப்பதோ, விளக்குகள் ஏற்றுவதோ இல்லை. மேலும், இந்த கிராமத்தில் இருந்து வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்த மக்கள் கூட, அந்த சாபம் தங்களைத் தொடரும் என்று அஞ்சுவதால், தீபாவளி கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுகின்றனராம்.