ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக...
Hon Son Doong: மனித காலடி தடமே படாத தனி ஒரு உலகம் - வியட்நாமின் மர்ம குகை பற்றித் தெரியுமா?
பிரிட்டிஷைச் சேர்ந்த ஜேசன் மல்லின்சன், ரிக் ஸ்டன்டான், கிறிஸ் ஜ்வெல் ஆகிய மூவரும் அட்வெஞ்சர் பயணங்கள் மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். யாருமே பாதம் பதிக்காத இடத்துக்குள் துணிச்சலாக நுழையும் சாகசக்காரர்கள். 2009ம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாதத்தில் இந்த மூன்று நீச்சல் வீரர்கள் வியட்நாமுக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வியட்நாமின் போங்க் நா கா பேங்க் தேசிய பூங்காவை அலசி ஆராயும் பணி வழங்கப்பட்டது. அப்போது சன் தூங் (Son Doong) குகையின் நீர்வழிப்பாதையை ஆராய்ந்துகொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அதுவரை யாரும் பார்த்திராத மிகப் பெரிய குகையுடன் அந்த நீர்வழிப்பாதை இணைவதைக் கண்டறிந்தனர்.
ஹாங் சன் தூங் எவ்வளவு பெரியது?
குகை என்றால் மனிதர்கள் குனிந்து செல்லும் அளவு குட்டையான பிளவாக இருக்கும் என்று தானே நினைத்திருப்பீர்கள்? இதன் சராசரி உயரம் 200 மீட்டர். சில இடங்களில் 503 மீட்டர் வரை உயரமானதாக இருக்கிறது.
175 மீட்டர் அகலமான இந்த குகை 9.4 கிலோமீட்டர் நீளமானது. உள்ளேயே தனி ஒரு நகரையே உருவாக்கும் அளவு இந்த குகையில் விசாலம் இருக்கிறது.
ஹாங் சன் துங் அருகில் உள்ள ஒரு குகையில் 5000 ஆண்டுகளுக்கும் முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஹாங் சன் துங்கில் அப்படி யாரும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை.
குகைக்குள் என்னென்ன இருக்கிறது?
மனித காலடித்தடமே படாமல் இருந்த அந்த குகை ஒன்றும் வெறுமையாக இல்லை. 200 மீட்டர் இறங்கி வரும் திறன்கொண்ட குரங்குகள் குகைக்குள் உள்ள காட்டுக்கு வந்து நத்தைகளை உண்கின்றன.
அணில், எலி, வௌவால்கள் மற்றும் சில பறவைகளும் இங்கு வந்துசெல்கின்றன.

இதன் சிறப்பாக உலகில் வேறெங்கும் வசிக்காத பிரத்யேக மீன்கள், சிலந்திகள், தேள்கள், இறால்கள் மற்றும் சில வகைப் பூச்சிகளையும் குகைக்குள் கண்டறிந்தனர்.
இந்த உயிரினங்கள் எவற்றுக்குமே கண்கள் இல்லை. மேலும் அவை எல்லாமும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தன.
இந்த குகையில் இரண்டு இடங்களில் மட்டுமே சூரிய வெளிச்சம் வரும் வகையிலான துளைகள் உள்ளன. இந்த வெளிச்சம் தான் மொத்த குகைக்குமான உற்பத்தி மூலமாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த வெளிச்சத்தைக் கொண்டு 1.5 கி.மீ வரை மங்கலாக நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இல்லாததால் எதையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை, கண்களுக்கான தேவையே இல்லை.
இந்த குகையில் உள்ள காடுகளில் 50 மீட்டர் வரை உயரமான மரங்கள் வாழ்கின்றன என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்.
இந்த குகையினுள் உள்ள சூழலியலைப் பொறுத்து உள்ளேயே மேகங்கள் கூட உருவாகலாம் என்கின்றனர்.
இந்த குகையின் சிறப்பு இது மிகப் பெரியது என்பது மட்டுமல்ல. இங்கு வசிக்கும் பல விதமான உயிரினங்கள், 4 மில்லியன் ஆண்டுக்கு முன்னான சூழல், அதற்கு உள்ளேயே இருக்கும் அழகிய இடங்கள், மரங்கள், நீச்சல் குளங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஹாங் சன் தூங் குகைக்கு நாமும் பயணிக்க முடியுமா?
Oxalis Adventure Tours என்ற நிறுவனத்தின் மூலமாகவே இந்த குகைக்கு நாம் பயணிக்க முடியும். இதன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் ஹோவர்ட் லிம்பெர்ட்.
ஒரு ஆண்டுக்கு 1000 பயணிகளை மட்டுமே குகையை சுற்றிப்பார்க்க அனுமதிக்கின்றனர். தேர்ந்த நீச்சல் வீரர்கள் கைடாக நம்முடன் வருவார்கள்.
பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இந்த குகையில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வியட்நாமின் ஏழ்மையான பகுதியாக இருந்த இந்த இடம் செல்வம் செழிக்கும் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.
இந்த குகைக்கு சென்று வர இரண்டரை லட்சம் வரை செலவாகலாம் என சில தளங்கள் தெரிவிக்கின்றன.