பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
ஊட்டி மலை ரயில் சேவை ரத்து - என்ன காரணம்?
கனமழை காரணமாக நீலகிரி மலைப்பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் கடந்த மூன்று நாட்களாக பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக இரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையால் பெரிய அளவிலான மண் சரிவும், பாறை சரிவும் ஏற்பட்டுள்ளது. மலை ரயில் பாதையின் முக்கிய இடங்களில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால், பாதையில் ரயில் இயக்கம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
தற்போது, பெரிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழை காரணமாக பணிகள் மெதுவாக நடைபெறுவதால், பாதை சீரமைப்புக்கு இன்னும் சில நாட்கள் எடுக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீராகியதும் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் சம்பவத்தால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிக்குச் செல்ல முன்பணம் செலுத்திய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.