``உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" - சுதா கொங்...
`இறந்துகிடந்த 50 மயில்கள்'- விவசாயி கைது
சங்கரன்கோவில் அருகே குருவிக்குளத்தில் 50 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி சரக வனத்துறையினர், வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் அங்குள்ள தோட்டங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு தோட்டத்தில் மயில்கள் இறந்தது கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யும் குருவிக்குளம் அருகே மீனாட்சிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜான்சன் என்பவரிடம் விசாரிக்கையில், குருவிக்குளத்ததைச் சேர்ந்த பாக்கியராஜ், ரவி என்பவருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, வாழை, எலுமிச்சை போன்றவற்றை பயிர்செய்து வந்துள்ளார்.

இங்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருக்கிறார். அதை எலியும், மயிலும் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயம் பாதிப்பதாகக் கூறி எலிகளை கொல்ல கழுகுமலையில் எலி மருந்து வாங்கி மக்காச்சோளத்தில் கலந்து தோட்டம் முழுவதும் வைத்துள்ளார். அந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்டதில் 50 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தன. பின் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்து கிடந்த மயில்களை எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். விசாரணைக்கு பின் ஜான்சன் மீது வழக்குபதிவு செய்து சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேசிய பறவையை விஷம் வைத்து கொன்ற சம்பவம் குருவிகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















