``உங்களுக்கும் மணி சாருக்கும் இடையே இந்தி பாலமாகவும் நான் இருந்தேன்" - சுதா கொங்...
உ.பி: மாணவியை சேர்க்க `கன்னித்தன்மை' சான்று கேட்ட மதரஸா நிர்வாகம்; பெற்றோர் போலீஸில் புகார்!
உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் என்ற இடத்தில் மதரஸா சார்பாக பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 13 வயது மாணவி படித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு 7வது வகுப்பு சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 8வது வகுப்புக்கு தேர்ச்சி பெற்றார். மாணவியை அவரது தாயார் பள்ளிக்கு அழைத்துச்சென்றபோது மாணவிக்கு கன்னித்தன்மை சோதனை சான்று இருந்தால்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வோம் என்று பள்ளி அட்மிஷன் பொறுப்பு அதிகாரி ஷாஜஹான் தெரிவித்தார். இது குறித்து மாணவியின் தாயார் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்தார். அதனை தொடர்ந்து இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

அவர் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தந்தை கொடுத்துள்ள புகாரில்,'' பள்ளிக்கு செலுத்தவேண்டிய கட்டணம் ரூ.35 ஆயிரத்தை செலுத்திய பிறகு எனது மகளை 8வது வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். அப்படி இருந்தும் மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற போது கன்னித்தன்மை சோதனை சான்று கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். எனது மனைவி அதனை எதிர்த்து வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு பள்ளியில் இருந்தவர்கள் எனது மனைவியை திட்டி அவமானப்படுத்தியதோடு அடித்துள்ளனர். அதோடு எனது மகளை பள்ளியில் இருந்து கட்டாயப்படுத்தி வேறு பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கும்படி கூறினர்.
சான்றிதழை வாங்க ரூ.500 கட்டணம் செலுத்திய பிறகும் பள்ளி நிர்வாகம் சான்றிதழை கொடுக்க மறுத்து வருகிறது''என்று குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் போலீஸார் போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அட்மிஷன் பொறுப்பாளர் ஷாஜஹானை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் மாணவியிடம் கன்னித்தன்மை சான்றிதழ் கேட்பது கிடையாது என்று பள்ளியின் செயலாளர் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.



















