Weekly Horoscope: வார ராசி பலன் 26.10.25 முதல் 1.11.25 | Indha Vaara Rasi Palan ...
``டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாசனத்திற்காக அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகம் முழுதும் மழை பெய்தாலும் உசிலம்பட்டி பகுதி வறட்சியாக உள்ளது, வைகை அணையிலிருந்து 58 ஆம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

டிடிவி.தினகரன் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார், மீடியா வெளிச்சத்துக்காக எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்கிறார், மீடியா வெளிச்சம் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் டிடிவி-யை மறந்து விடுவார்கள்.
டெல்டா மாவட்ட மண்ணின் மைந்தனான டிடிவி தினகரன், நெல் கொள்முதல் செய்யாததால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளின் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல டிடிவி தினகரனின் பேச்சுக்கள் உள்ளது, மக்கள் பணிகளை முதலில் செய்யட்டும் பின்னர் மக்கள் தலைவர் குறித்து பேசட்டும், டிடிவி தினகரனுக்கு ஊடக வெளிச்சம் இருப்பதால் போவோர் வருவோரை ஆபாசமான வார்த்தைகளில் பேசுகிறார்.

டிடிவி தினகரனின் பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடைபெறாது அவருடைய கதை முடிந்து போன கதை, Expiry Date-க்கு முன்னாள் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும், பின்னால் சாப்பிட்டால் விஷமாகும், மருந்து வேண்டுமா? விஷம் வேண்டுமா? என மக்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.
டிடிவி.தினகரன் Expiry Date அரசியல்வாதியாக உள்ளார், அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம், டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து வீணாகியுள்ளது, டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது, டெல்டா விவசாயிகள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.

















