Weekly Horoscope: வார ராசி பலன் 26.10.25 முதல் 1.11.25 | Indha Vaara Rasi Palan ...
கொடைக்கானல்: ‘அஞ்சு வீடு’ அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் `அஞ்சு வீடு' அருவி இருக்கிறது. அதிகம் இந்த அருவி பற்றி வெளியே தெரியாத நிலையில் அருவி பற்றி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களின் வழியாக இளைஞர்கள் தெரிந்துகொண்டு அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அஞ்சு வீடு அருவியில் குளிப்பதற்காக கோவையைச் சேர்ந்த 11 மருத்துவ மாணவர்கள் வந்திருக்கிறார்கள். அதில் நந்தகுமார் என்பவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகே நந்தகுமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சுற்றுலாத்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தராததாலேயே கடந்த ஐந்து வருடங்களில் இந்த அருவியில் குளிக்க வந்து 14 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அஞ்சு வீடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று சுற்றுலாத்துறையினர் இந்த பகுதியை ஆய்வு செய்து, “ யூ-டியூப் வீடியோக்களில் பார்த்துவிட்டு இளைஞர்கள் இங்கு வருகை தருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சுற்றுலாத் துறை அனுமதி இல்லாத இந்த அருவிக்கு வர வேண்டாம்" என தெரிவித்தனர்.

இந்நிலையில் இங்கு தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருப்பதாகவும் அதுவரை இந்த அஞ்சு வீடு அருவி தடை செய்யபட்ட அருவியாக அறிவிக்கபடுகிறது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் கொடைக்கானலைச் சுற்றியுள்ள அரசால் அங்கீகரிக்கபடாத அருவிகள் அனைத்தும் தடை செய்யபட்ட பகுதிகள் எனவும் இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் வழிகாட்டிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.



















