2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
தேனி: ``மக்கள் பிரச்னைகளில் அலட்சியமாக செயல்படாதீர்கள்'' – அதிகாரிகளை விளாசிய ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய அதிகாரிகள், “தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 829.80 மி.மீ அளவு மழை பெய்யும். இதை கணக்கிட்டால் அக்டோபர் மாதம் வரை 627.1மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது 782.2 மிமீ அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையே வெள்ளத்திற்கு காரணமாக உள்ளது. மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்திருக்கிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றனர்.
தொடர்ந்து பேசிய விவசாயி சீனிராஜ் , ”தேனியில் பெய்த மழையினால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 17500 ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மற்ற மாவட்டங்களில் ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வரை தருகிறார்கள். இது ஓரவஞ்சனை பார்வை. மற்ற மாவட்டங்களை போலவே தேனியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.

தேனியில் சரியாக குடிமராமத்து பணிகள் நடைபெறதாதலேயே மழைநீரானது வயல்வெளிகளிலும் வீடுகளிலும் புகுந்திருக்கிறது. குடிமராமத்து பணிகளை முறைப்படுத்தி அடுத்த மழை காலத்திற்குள் முழுவதுமாக முடிக்க வேண்டும். தேனியில் புதியதாக 18 இடங்களில் நவீன நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அடுத்து பேசிய விவசாயி நாகராஜ், “வருச நாடு பகுதியில் உள்ள 18 கிராம மக்களை வனத்துறை வெளியேற்ற நினைக்கிறது அதை தடுக்க வேண்டும் தலை தலைமுறையாக அங்கு வசித்து வருகிறோம். நாங்கள் வனத்திற்கு எதிராக எதையும் செய்யவில்லை எங்களை வெளியேற்ற கூடாது" என்று கோரிக்கை வைத்தார்’.

இவர்களை தொடர்ந்து பேசிய குள்ளபுரத்தை சேர்ந்த விவசாயிகள், “எங்கள் ஊரில் விளை நிலங்களில் கல்குவாரி அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது அதை தடுக்க வேண்டும் என்று பலமுறை மனுகொடுத்தும் இன்னமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றனர்.
உடனே கனிம வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் மாவட்ட ஆட்சியர். அதற்கு கனிம வளத்துறை அதிகாரிகள் சரிவர பதில் ஏதும் கூறாததால் கோபமடைந்த ஆட்சியர் ‘விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் இவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறீர்கள். மாதம் ஆனால் சம்பளம் வாங்குகிறீர்கள் ஆனால் வேலையை மட்டும் செய்வதில்லை. இதை ஆய்வு செய்யவே ஒரு மாதமாகி விட்டது.

உங்கள் சம்பளத்தை எனக்கு தந்து விடுகிறீர்களா? நீங்கள் செல்லவில்லை என்றால் நானும் சப் கலெக்டரும் தான் செல்ல வேண்டும்’ என்றார் காட்டமாக.
அதற்கு பதிலளித்த அதிகாரி பொன்கூடலிங்கம் “உதவி இயக்குநர் கோர்ட்டிற்கு சென்றிருக்கிறார் அவர் வந்ததும் தகவல் சொல்லி விசாரிக்கிறோம்’ என்றார்.
இன்னமும் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர்,“ இவர்களுடைய பிரச்னையை அடுத்த வருடத்தில் தான் தீர்த்து வைப்பீர்களா? அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்யுங்கள். நானே இந்த பிரச்னையை பார்த்து கொள்கிறேன்’ என்று அதிகாரியை கடிந்து கொண்டார் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்.

அப்போது வந்த டிஆர்ஓவையும் ஏன் ஆய்வுக்கு செல்லவில்லை என்று கேட்டு கண்டித்து விட்டு நானே ஆய்வுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டார் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்.
இதை சொன்னவுடனே விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.
















