`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
`இது சட்டத்திற்கு புறம்பானது' - WTO-ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?
'இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்' என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.
என்ன பிரச்னை?
இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக,
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் அட்வான்ஸ்ட் கெமிக்கல் செல் பேட்டரி ஸ்டோரேஜ் தயாரிப்புகள்,
ஆட்டோமொபைல் சார்ந்த உற்பத்திகள், பயணிகள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புகள் போன்றவற்றை இந்தியாவிற்குள் தயாரிக்க ஊக்குவித்து இந்திய அரசு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதிகளை குறைக்கவும் செயலாற்றுகிறது.
இன்னும் மிக முக்கியமாக, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முயலுகிறது.

இதில் சீனாவுக்கு என்ன பாதிப்பு?
உலகளவில் ஆட்டோமொபைல் பாகங்கள், எலெக்ட்ரிக் பேட்டரிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் இந்தத் திட்டங்களால் சீனாவில் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றலாம்.
அடுத்ததாக, சீனாவிடம் இந்தப் பொருள்களை வாங்கி வரும் உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் திரும்பலாம். இதனால், சீனாவின் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்படையலாம்.
சீனா இந்தியாவை பெரியளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தையாக பார்க்கிறது. இந்தியாவிலேயே சலுகைகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்படும் போது, இறக்குமதி வாகனங்களை விட, இந்த வாகனங்களின் விலை குறைவாக இருக்கும்.
சீனாவின் கூற்று என்ன?
இந்தியாவின் சலுகை திட்டங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இது சர்வதேச வர்த்தகச் சட்டத்தின் மீறல் ஆகும்.
மேலும், இத்தகைய திட்டங்கள் சீனாவின் ஏற்றுமதியைக் கடுமையாக பாதிக்கும்.
ஆக, இது மானியங்கள் மற்றும் எதிர் நடவடிக்கை நடவடிக்கைகள் ஒப்பந்தம் (SCM), கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கு தொடர்பான பொது ஒப்பந்தம், 1994 (GATT) மற்றும் வர்த்தகம் தொடர்பான முதலீட்டு நடவடிக்கைகள் ஒப்பந்தம் (TRIM) ஆகியவற்றின் விதிமீறல் என்று சீனா குற்றம்சாட்டுகின்றது.

இப்போது சீனா என்ன கேட்கிறது?
இந்தத் திட்டங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி வேண்டும்.
ஒருவேளை இது பலனளிக்காவிட்டால், அடுத்ததாக, இந்தியா மீது சீனா உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடுக்கும்.
இந்தியா மற்றும் சீனா- இரண்டு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் என்பதால் இது தான் நடைமுறை.
இந்தியா மட்டுமல்ல
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கி வருகின்றன.
இதனால், இந்தப் புகார் எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.