Iceland: கொசுக்கள் இல்லாத நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 3 கொசுகள் - என்ன க...
`பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா; கூட்டணியில் குழப்பம்' - அமைச்சர் தரும் விளக்கம் என்ன?
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணையாமல் இருந்தன. இதை அடுத்து மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில் கேரள மாநிலம் திடீரென பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்து உள்ளது. அதற்காக கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.
இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. மேலும், ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் சி.பி.எம் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு கையெழுத்திட்டது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில்,
"வெளியில் ஒன்று பேசுவதும், உள்ளே மற்றொன்று செய்வது என இரட்டை நிலைபாட்டில் செயல்படுகிறது சி.பி.எம் அரசு. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதில்லை என உறுதியாக இருந்தது இந்த அரசு. ஆனால் திடீரென அந்த திட்டத்தில் முழுமையாக இணைந்துள்ளது.
அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மத்திய அரசு திட்டத்தில் இருந்து நிதி பெறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.

கூட்டணிக்குள் எதிர்ப்பு
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு கையெழுத்திட்ட விவகாரம் அக்கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில்,
"யாரிடமும் விவாதிக்காமலும், ஆலோசனை கேட்காமலும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து எல்.டி.எஃப் கூட்டணியிலும் விவாதிக்கவில்லை.
இதுபற்றி தெரிந்துகொள்ளும் உரிமை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. ஒப்பந்தம் குறித்தும், அதன் உள்ளடக்கம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகளை இருட்டில்விட்டுவிட்டு செல்வதுதான் எல்.டி.எஃப் கூட்டணியின் செயல்பாடா? தேசிய கல்வித்திட்டத்தின் வெளிப்பாடுதான் பி.எம்.ஸ்ரீ திட்டம்.
இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கு கவலை உண்டு. இடதுசாரிகளின் மாண்பை மறக்கும் இந்தப் பழக்கம் சரி செய்யப்பட வேண்டும். இதுகுறித்து எல்.டி.எஃப் ஒருங்கிணைப்பாளருக்கு சி.பி.ஐ சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார்.
கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி விளக்கம்
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"மாணவர்களுக்கு சேரவேண்டிய ஆயிரக்கணக்கான மத்திய நிதியை தடுத்துவைத்துக்கொண்டு கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்கும் விதமாக பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டோம்.
பொதுக்கல்வியை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு ரூபாயைக் கூட இழக்கவும் அரசு தயாராக இல்லை.
2013 முதல் இந்த நிதியாண்டுவரை 1158.13 கோடி ரூபாய் நமக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டம் 2027-ம் ஆண்டு நிறைவுபெறும்.
நாம் கையெழுத்திட்டதன் மூலம் 1476.13 கோடி ரூபாய் நிதி மாநிலத்துக்கு கிடைக்கும். ஒரு கொள்கையில் மட்டும் நம்மால் நிற்க முடியாது.
காலக்கட்டத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கொள்கையை கூறிக்கொண்டு கோடிக்கணக்கான பணம் நாம் நஷ்டப்பட வேண்டுமா?"

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த மத்திய அரசுடன் நானும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் விவாதித்தோம். மத்திய அரசு மாறுவதாக தெரியவில்லை. அதனால் நிதியை இழக்க வேண்டாம் என்பதற்காக பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தோம். காலக்கட்டத்துக்கு ஏற்ப உலகம் முழுவதும் கல்விமுறை மாறிவருகிறது. எனவே கல்வி, சுற்றுலா, உலக வங்கியில் கடன் வாங்குவது, தனியார் நிறுவனத்தை கேரளாவில் கொண்டுவருவது என அனைத்திலும் மாற்றம் வந்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. முதலில் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் பேசட்டும்" என்றார்.
















