Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
Bihar: முதல்வர் வேட்பாளர் யார்? பிரசாரம் தொடங்கிய மோடி; NDA-வில் முடியாத சிக்கல்!
தேர்தல்
பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
பா.ஜ.க - ஜேடியு கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளன. தேர்தல் கூட்டணி கணக்குகள், தொகுதிப் பங்கீடு எனத் தேர்தல் களம் தீவிரமாகி வருகிறது. மற்றொருபுறம் தேர்தல் பிரசாரமும் நடந்துவருகிறது.
பிரதமர் பிரசாரம்
அதன் ஒரு பகுதியாக பீகாரின் சமஸ்திபூரில் தனது பீகார் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரின் உரையில், ``இந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அதன் முந்தைய வெற்றி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும்.
பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கும். ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் பொழிந்த அன்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
(அடையாள சைகையில், மொபைல் டார்ச்லைட்களை இயக்குமாறு கேட்டுக்கொண்டு) இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது... நமக்கு லாந்தர் விளக்கு தேவையா?
பீகாருக்கு லாந்தர் (ஆர்.ஜே.டி) தேவையில்லை. அக்டோபர் 2005-ல் நிதிஷ் குமார் தலைமையில் NDA-வின் நல்லாட்சி தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் ஆர்.ஜே.டி கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது பீகாருக்கு எதிராக அவர்கள் பல தடைகளை உருவாக்கினர்" என்றார்.
யார் முதல்வர் வேட்பாளர்?
இந்த நிலையில், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ஜ.க தலைவர்கள் நிதிஷ் குமாரின் நிர்வாக சாதனையை பாராட்டினாலும், அவரை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முறையாக அறிவிக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் முகம் குறித்த நேரடி கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``நிதிஷ் குமார் முதல்வராக இருப்பாரா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய வேண்டியவர் அல்ல.
இப்போதைக்கு, நாங்கள் அவரது தலைமையில் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வோம்” என்றார்.
முதல்வர் முகம்?
எனவே, நிதிஷ் குமார் முதலமைச்சராகத் தொடர்வது உறுதி செய்யப்படவில்லை. 2005 முதல், ஜே.டி.(யு) தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாபந்தன் கூட்டணி என எதில் இருந்தாலும், நிதிஷ் குமாரே பீகாரின் சட்டமன்றத்தின் ஒவ்வொரு தேர்தலிலும் முதல்வர் முகமாக இருந்து வருகிறார்.
ஆனால் இந்த முறை அவர் முதல்வர் முகமாகவே தொடர்கிறாரா என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதன்முறையாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், நிதிஷ் குமார் முதலமைச்சராக நீடிப்பாரா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக, இந்த சந்தேகம் எதிர்க்கட்சிகளிடமிருந்து அல்ல, பாஜக தலைமையிலான கூட்டணிக்குள்ளேயே இருப்பதுதான் பெரும் சோகம்.















