Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் - Family க்ளிக்...
``சீரியலில் பாதியில வர்றவங்களுக்கு மோசமான விஷயம் நடக்குது" - ஸ்ரீ குமார் பேட்டி
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கெட்டி மேளம்’ தொடரில் இன்று முதல் இணைந்திருக்கிறார் நடிகர் ஸ்ரீ குமார். ஹீரோவாக நடித்து வந்த சிபு சூர்யன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு கமிட் ஆகியுள்ளார் ஸ்ரீ. தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சாயா சிங்குடன் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிபு வெளியேற்றப்பட்டார் என்கிறார்கள்.
இதற்கு முன் ஸ்ரீ நடித்து ஹிட் ஆன ‘வானத்தைப் போல’, ’யாரடி நீ மோகினி’ தொடர்களிலுமே கூட ஸ்ரீ பாதியிலிருந்து நடிக்க வந்தவர்தான்.

சீரியல்களில் பொதுவாக ‘இவருக்குப் பதில் இவர்’ என வரும் ரீ ப்ளேஸ்மென்ட் கேரக்டர்களில் நடிக்க நடிகர் நடிகைகள் தயக்கம் காட்டுவர். குறிப்பிட்ட நாள் வரை ஒருவர் நடித்திருக்கும் நிலையில் அந்தக் கேரக்டரில் திடீரென புதிதாக வருபவர்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என நினைப்பதுதான் அதற்குக் காரணம். இதை மீறி சில சீரியல்கள் ஆர்ட்டிஸ்டுகள் மாற்றிய பின் தொடர்ந்து ஹிட் ஆனதும் நடந்திருக்கிறது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா மறைவுக்குப் பிறகு அந்தக் கேரக்டரில் வேறு ஆர்ட்டிஸ்டுகள் நடித்து ஹிட் ஆனது நினைவிருக்கலாம்.
தவிர, ’என்னதான் இருந்தாலும் அவர் மாதிரி இல்லைப்பா’ என்கிற கமென்ட்டுகள் அசால்ட்டாக வந்து விழும்.
இந்தப் பின்னணியில் ‘ரீ ப்ளேஸ்மென்ட்டா கூப்பிடுங்கப்பா அவரை’ என தயாரிப்புத் தரப்பும் ஸ்ரீ யையே கூப்பிடுவதாக அறிந்ததால் அவரிடமே பேசினோம்.
‘’நீங்க சொல்றது நிஜம்தான். ரீ ப்ளேஸ்மென்ட் கேரக்டர்னா தெறிச்சு ஓடுற எத்தனையோ பேரை நானே பார்த்திருக்கேன். அதுவும் சுமாரான சீரியல்னாலும் பரவால்ல, கொஞ்சம் ஹிட் ஆகிட்ட சீரியல்னா ரொம்பவே பயப்படுவாங்க. எங்க நாம போன பிறகு சீரியல் ஓடலைன்னா, பழி நம்ம மேல விழுந்திடுமேன்னு யோசிப்பாங்க!

ஆனா, எனக்கு என்னவோ அடுத்தடுத்து அந்த மாதிரி வாய்ப்புகள் வந்துச்சு. நான் ரெண்டு விஷயத்தை யோசிச்சுப் பார்க்குறேன். ஒண்ணு ஒரு சீரியல் நல்லா போயிட்டிருக்கிறப்ப ஏதோவொரு சூழல்ல ஹீரோ விலகறார்னா அப்ப தயாரிப்புத் தரப்பு அவர் போகக் கூடாதுனுதான் நினைக்கும். ஆனா எந்தவொரு விஷயத்துக்கும் ஒரு எல்லை இருக்கில்லையா? ஹீரோவைப் போய் எவ்வளவுதான் தாங்கறது? ஒருவேளை அதனால் அந்த சீரியல் முடிஞ்சுதுன்னா, அந்த சீரியலால் வாழ்க்கை கிடைச்சிட்டிருந்த எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்கன்னுதான் நினைச்சுப் பார்ப்பேன்.ரெண்டாவது விஷயம் நாம அந்தக் கேரக்டருக்கு எவ்வளவு உண்மையா நடிக்கிறோமோ அதைப் பொறுத்தே வரவேற்புங்கிறதுல நான் தெளிவா இருக்கேன்.. நம்ம மேல் நம்பிக்கை இருக்கிறப்ப எதுக்கு கமென்ட்டுக்கெல்லாம் பய்ப்படணும்?
`யாரடி நீ மோகினி' ‘வானத்தைப்போல' ரெண்டுமே நான் நடிக்க வந்த பிறகும் ரேட்டிங்ல இறங்காம கடைசி வரை அதே விறுவிறுப்புடன் ஒளிபரப்பாச்சே!
அதனால யார் என்ன சொன்னாலும் அதைப் புறந்தள்ளிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்.
இதுல இன்னொரு மோசமான விஷயமும் இருக்கு. அதாவது ஒரு நடிகர் நடிச்சு ஹிட் ஆகிட்ட சீரியல்ல அவர் வெளியேறின பிறகு வேறொருத்தர் வந்தா, சிலர் இருக்காங்க, அந்த சீரியல் தொடர்ந்து நல்லா போறதை அவங்க விரும்பறதில்லை. அவங்களே ஆள் செட் பண்ணி சீரியல் பத்தியும் புதுசா வந்த ஆர்ட்டிஸ்ட் பத்தியும் அவதூறை அள்ளி விடுறது. இந்தப் போக்குதான் நல்லதில்லைன்னு சொல்றேன்.
இதுக்குப் பயந்துதான் பலர் ரீ ப்ளேஸ்மென்ட் கேரக்டர்னா ஓடுறாங்க" என்கிறார் ஸ்ரீ.

















