Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் - Family க்ளிக்...
பெயிண்ட் திருநெல்வேலி: விழிப்புணர்வு ஓவியங்கள்; மாணவர்கள் கைவண்ணத்தில் புதுப்பொலிவு பெறும் சுவர்கள்!
திருநெல்வேலி மாவட்டத் துணை ஆய்வாளர் பிரசன்ன குமார் ஐபிஎஸ் அறிமுகப்படுத்திய 'பெயிண்ட் திருநெல்வேலி' என்கிற திட்டத்தின் மூலம், வாராவாரம் கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
இது குறித்து பிரசன்ன குமார் ஐபிஎஸ்-ஸிடம் கேட்டபோது, "அனைத்து மாணவர்களும் ஏதேனும் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்றே இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். மாணவர்களுக்கு சமூகத்தின்மீது ஆர்வம் தோன்றுகையில் அவர்கள் தானாகவே நல்வழிப்படுவார்கள். ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் குழுவாக ஒன்றிணைந்து ஓவியங்களை வரைவார்கள்." என்று கூறினார்.

பெயிண்ட் திருநெல்வேலி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மிதார் முகைதீனிடம் இந்நிகழ்வு குறித்து கேட்டபோது, "பிரசன்ன குமார் ஐபிஎஸ் அவர்கள் எதிலும் முழுமையாக ஈடுபடுவார். திருநெல்வேலி மாவட்டத் துணை ஆணையராக இவர் பதவியேற்றபோது போதை, சாதி, மதம் போன்றவற்றிலிருந்து மாணவர்கள் வெளிவர 'பெயிண்ட் திருநெல்வேலி' என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
முதலில் நான்கு கல்லூரி மாணவர்களோடு முன்னெடுத்தோம். மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கூடச் சுவற்றில் கல்லூரி மாணவர்கள் படம் வரைகிறார்கள். இதன்மூலம் 100 பள்ளிகளுக்கும் மேலாகச் சென்று படம் வரைவதே எங்களது இலக்கு. சமூக சிந்தனை உள்ளவர்கள் இதில் தாராளமாக பங்கெடுக்கலாம்" என்றார்.
'பெயிண்ட் திருநெல்வேலி' திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட் அவர்களிடம் இத்திட்டம் குறித்து கேட்டபோது, ``மாணவர்கள் தங்களது ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் வெயில் வரும்வரை ஓவியங்களை வரைகிறார்கள். சமூக ஆர்வலர்கள் மாணவர்களுக்கு நீர், உணவு போன்றவற்றை வழங்குகின்றனர்.
கல்லூரி மாணவர்களே ஒரு விழிப்புணர்வு ஓவியத்தை தேர்ந்தெடுத்துத் தாமாக வரைகிறார்கள். இந்த 'பெயிண்ட் திருநெல்வேலி' திட்டத்திற்கு எங்களுக்குப் பெயிண்டினை வழங்குவது 'பெர்ஜர்' பெயிண்ட் நிறுவனமே. காவல்துறையின் உதவி, மாணவர்களின் தன்னார்வம் இவை அனைத்தும் சேர்ந்து இந்நிகழ்வினை மேலும் மேம்படுத்துகிறது" என்று உற்சாகத்தோடு கூறினார்.







ஒருங்கிணைப்பாளர் செல்வி மகாலட்சுமி பேசுகையில், "திட்டத்தில் மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து, உற்சாகமாக ஓவியங்களை வரைகிறார்கள். தாளில் வரைவது போல் சுவரில் ஓவியம் வரைகையில் பிரஷை சரியாகப் பயன்படுத்துவது, நிறங்களைச் சேர்ப்பது மற்றும் ஓவியங்களை முழுமை பெறச்செய்வது போன்றவை என்னுடைய வேலை. எந்த துறை மாணவர்களும் கலைத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். மாணவர்கள் தன்னார்வத்தோடு செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோல்" என்றார்.
கல்லூரி மாணவி மஞ்சு நம்மிடம் பேசுகையில், "நாங்கள் குழுவாக ஒன்றிணைந்து வரைவது புதிதாக உள்ளது. போதை ஒழிப்பு, மழைநீர்ச் சேகரிப்பு போன்ற விழிப்புணர்வு ஓவியங்களை வரைவது எங்களுக்கு மன நிம்மதியையும் ஓவியங்களை பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வையும் தருகிறது. மேலும் நாங்கள் வாராவாரம் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஓவியங்களை வரைகிறோம்" என்றார்.
















