2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
``காலக்கெடு, தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்கள் செய்ய மாட்டோம்'' - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்த முயன்றுவரும் சூழலில், நம் நாடு அவசர அவசரமாகவோ, அழுத்தத்தின் கீழோ ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது எனப் பேசியுள்ளார் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
ஜெர்மனியில் பெர்லின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட அவர், "நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீவிர உரையாடலில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்காவுடனும் பேசி வருகிறோம். ஆனால் நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை. காலக்கெடுவோடு அல்லது எங்கள் தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளமாட்டோம்.
இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைக்க முன்வந்தாலும் விரைவாக ஒப்பந்தத்தை முடிக்க நாட்டின் நலன்களை விட்டுக்கொடுக்காது.
வர்த்தக ஒப்பந்தங்களை குறுகிய கால நன்மைகளை விட நீண்ட கால கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.
மேலும் இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு நியாயமான நெறிமுறைகளை உறுதிசெய்யவும் அதீத கட்டணத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் புதிய சந்தைகளையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.
வெளிப்புற அழுத்தங்களால் அல்லாமல் நாட்டின் நலன்களையும் மூலோபாயத்தையும் கருத்தில்கொண்டே முடிவு எடுக்கப்படும்.

தேசத்தின் நலனைத் தவிர வேறு எதன் அடிப்படையிலும் இந்தியா அதன் நண்பர்களைத் தேர்வு செய்ததில்லை" என்றார்.
மேலும் இந்தியா பரஸ்பர மரியாதையுடனேயே நட்பைப் பேணும் என்றும், யாரிடம் வர்த்தகம் செய்யலாம், செய்யக் கூடாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ளாது என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருவதை ஒட்டி அவரது கருத்துக்கள் அமைந்தன.
சமீபகாலமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துள்ளது. இதனால் மோடி அரசாங்கம் டொனால்ட் ட்ரம்புக்கு அஞ்சி நாட்டின் நலன்களை விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.













