ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் - முழு விவரம்
`என் அம்மா பெருமைப்படுவார்' - ரூ.4000 கோடியில்; 55 மாடி - ஷாருக்கின் பெயரை வைக்கும் நிறுவனம்
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார நடிகராக அறியப்படுகிறார். அவரது புகழ் இந்தியா மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும் வெகுவாக பரவியிருக்கிறது. இதனால் ஷாருக் கானின் படங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதையடுத்து துபாயில் புதிதாக கட்டப்படும் 55 மாடி வணிக வளாகக் கட்டிடத்திற்கு ஷாருக் கான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. Shahrukhz Danube என்று அக்கட்டடத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் அடுத்த 3 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். இக்கட்டடத்தில் ஹெலிபேட் மற்றும் நீச்சல் குளம் உட்பட 40 வகை முதன்மையான வசதிகள் செய்யப்பட இருக்கிறது.
மேலும் கட்டடத்தின் நுழைவாயிலில் பார்வையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்காக ஷாருக் கானின் சிலை இடம்பெறும். இக்கட்டடத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக் கான் மற்றும் இயக்குனர் பரா கான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஷாருக் கான்,''எனது படங்களைத் தவிர வேறு எதையும் என் பெயரில் வைக்கும் அளவுக்கு நான் என்னை முக்கியமானவனாகக் கருதவில்லை.
திரைப்படங்கள் எனது தொழில் மற்றும் வழிபாட்டின் ஒரு பகுதியாகும். இத்திட்டம் குறித்து என்னிடம் சொன்னபோது முதல் முறையாக அதற்கு ஒப்புக்கொண்டேன். நிறைய பேர் தங்கள் வீடுகளை உருவாக்க பெரிய நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களின் கனவு வணிகங்களையும் வீடுகளையும் உருவாக்குவவதில் நான் அதில் ஒரு பகுதியாகவும் உத்வேகமாகவும் இருக்க முடிந்தால், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக இருக்கும். இக்கட்டடத்திற்கு எனது பெயர் வைப்பது மிகப்பெரிய பெருமையாகும். இதனை என் தாயார் பார்த்தால் மிகவும் பெருமைப்படுவார். எனது பிள்ளைகள் கட்டிடத்தில் அப்பா பெயர் எழுதப்பட்டுள்ளது என்று சொல்வார்கள்," என்று கூறினார்.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஃபரா கான்,"ஷாருக் தனது பெயரை கௌரி, ஆர்யன், சுஹானா மற்றும் அப்ராம் ஆகியோருக்கு மட்டும் வைத்துள்ளார்''என்று தெரிவித்தார். துபாயில் மிகவும் பிரபலமான டனூப் பிராபர்டீஸ் நிறுவனம் இந்த 55 மாடி கட்டடத்தைத் கட்டுகிறது. இது தொடர்பாக அறிவிக்க அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மும்பை வந்திருந்தனர். அவர்கள் நடிகர் ஷாருக் கான் முன்னிலையில் கட்டடத்திற்கு ஷாருக் கான் பெயர் வைக்கும் அறிவிப்பை வெளியிட்டனர். இத்திட்டம் ரூ.4000 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.



















