சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ர...
Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?
Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி நடப்பதுதான் பலன் தரும் என்கிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.
10,000 அடிகள் நடப்பது என்பது 8 கிலோமீட்டர் தூரம் நடப்பதற்குச் சமமானது. தினமும் அவ்வளவு தூரம் நடப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே, அதைப் பின்பற்றுவது நல்லதுதான். ஆனால், அதற்காக பத்தாயிரம் அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்கும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை.
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கும்போது இதயத்தின் செயல் மேம்படும். அதை எப்படி நடக்கிறோம் என்பதும் இதில் முக்கியம். மிகவும் பொறுமையாக, நீண்ட நேரம் நடப்பது என்பது சிறந்த உடற்பயிற்சியாக இருக்காது. அதை உடலியக்கமாக மட்டுமே கருத முடியும்.
நீங்கள் 10,000 அடிகளை மிக மெதுவாக, நீண்ட நேரம் நடக்கிறீர்கள், பேசிக்கொண்டே நடக்கிறீர்கள் என்றால் அதன் பலன் முன்னதை விட குறைவாகவே இருக்கும். சிலரால் 5,000 அடிகள்தான் நடக்க முடியும். ஆனால், அதை வேகமாக நடப்பார்கள். பத்தாயிரம் அடிகளை மெதுவாக நடப்பதை விடவும் இது மிகவும் சிறந்தது.

குறைவான தூரம் நடந்தாலும் வேகமாக நடக்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதயத்தை கண்டிஷன் செய்ய இது நல்ல பயிற்சியாக அமையும்.
உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு நீங்கள் 20 நிமிடங்கள் நடப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு நிமிடம் மிக வேகமாகவும் அடுத்த ஒரு நிமிடம் மெதுவாகவும் நடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அந்நிலையில் உங்கள் இதயத் துடிப்பானது அதிகரிப்பதும் குறைவதுமாக மாறிக்கொண்டே இருக்கும். அது உங்கள் இதயத்தை கண்டிஷன் செய்ய உதவியாக இருக்கும்.
இதில் உங்களால் 10,000 அடிகளை நடக்க முடியலாம், முடியாமலும் போகலாம். ஆனாலும், இந்த நடை உங்கள் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்தியிருக்கும். எனவே, எண்களை முக்கியமாக நினைக்காமல், உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சிறிது தூரம், சிறிது நேரம் நடப்பது என்பதை மட்டும் பின்பற்றுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.













