`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?
Doctor Vikatan: என் குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அது உடல்நலத்துக்கு கெடுதல் ஆனதா?... போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

சின்ன கடைகள் தொடங்கி, பெரிய கடைகள் வரை போலி பனீர் பயன்பாடு அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது. காரணம், பனீரின் விலைதான். 'அனலாக் பனீர்' (Analogue Paneer) என அழைக்கப்படும் இந்த பனீர், செயற்கையானது, விலை மலிவானது.
இத்தகைய போலி பனீரை, பாம் ஆயில், ஹைட்ரஜனேட்டடு வெஜிடபுள் ஆயில், ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து, பாலில் இருந்து பெறப்படும் திடப்பொருள், எண்ணெயையும் தண்ணீரையும் சேர்க்கும்போது அவை இரண்டும் தனித்தனியே பிரியாமல் ஒன்றாகச் சேர்வதற்கான எமல்சிஃபையர் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கிறார்கள்.
பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய் வரை இருக்கும். அதைவிட அடிமட்ட விலைக்கு பனீர் கிடைக்கிறது என்றால் அது அசல்தானா என்று செக் செய்ய வேண்டும்.
அசல் பனீர், உதிர்த்தால் உதிரும்படியும் மென்மையாகவும் இருக்கும். போலி பனீர் என்றால், ரப்பர் தன்மையுடன் கடினமாக இருக்கும். சிறிதளவு பனீரில் சில துளிகள் அயோடின் திரவத்தை விட்டால், போலி பனீராக இருந்தால், அது நீலநிறமாக மாறும். காரணம், அதிலுள்ள மாவுச்சத்து. அசல் பனீர் என்றால் நிறம் மாறாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















