செய்திகள் :

BB Tamil 9 Day 38: ராஜா - ராணி டாஸ்க் சொதப்பல்; திவாகரை பங்கம் செய்த வினோத்!

post image

ராஜா - ராணி டாஸ்க் இரண்டாவது நாளிலும் சொதப்பல்தான். திவாகரை பங்கம் செய்து வினோத் சொல்லும் கமெண்ட்டுகள் மட்டுமே சற்றாவது கலகலப்பை ஏற்படுத்துகின்றன. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 38

‘பொன்னிநதி பார்க்கணுமே’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. இரண்டு போ் இருக்கிற வீட்டிலேயே பாத்ரூமிற்கு காலையில் சண்டை ஏற்படும். இத்தனை போ் இருக்கிற வீட்டில் சண்டை ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். சண்டை ஏற்படுவதற்குத்தானே பிக் பாஸ் இரண்டே பாத்ரூம்களை கட்டி வைத்திருக்கிறார்?!

“இன்னிக்கு டாஸ்க்கிற்கு என்ன பிளான் செஞ்சு வெச்சிருக்கிறே?” என்று திவாகரை நோண்டத் துவங்கினார் வினோத். பின்குறிப்பாக “நீ என்ன செய்யப் போறே.. ஏற்கெனவே மூணு தோசை உள்ளே போயிடுச்சு.. அடுத்து என்ன சாப்பிடலாம்ன்னுதான் யோசிப்பே” என்று வினோத் கிண்டலடிக்க, திவாகருக்கு கோபம் வந்து “நீ வடசட்டியை நக்கித் தின்றவன்தானே?” என்று பதில் தாக்குதலைத் துவங்க, இரு தேசத்து ராஜாகளுக்கும் இடையில் தீனிப்பண்டார போர் துவங்கியது. 

பாரு சமையில் டீமிற்குள் வந்தது எஃப்ஜேவிற்கு பிடிக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. தோசைக்கு குழம்பு போதாத நிலையில், தனக்கு தரப்பட்ட குழம்பை பாரு வீணாக்கியதால் எஃப்ஜேவிற்கு கோபம். தோசையைத் தூக்கி குப்பையில் எறிந்தார். “அதை வேஸ்ட் பண்ணாம மத்தவங்களுக்கு தந்திருக்கலாமே?” என்று கனியும் கூடவே பின் பாட்டு பாடினார். ‘உணவு வேஸட்’ என்றதும் பாருவிற்கு விசாரணை நாள் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். “ஓகே.. பாடம் கத்துக்கிட்டேன்” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார். பாரு மன்னிப்பு கேட்பது உலகத் தொலைக்காட்சிகளில் இதுவே முதன்முறையாக இருக்கலாம். 

BB TAMIL 9: DAY 38

புதிய அரசியாக பாரு -  புதிய அரசனாக விக்கல்ராயன்


ராஜா ராணி டாஸ்க். இரண்டு ராஜாக்களையும் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்தார் பிக் பாஸ். “நீங்க நல்லா செய்யலைன்னு அர்த்தமில்ல. மாத்திப் பார்த்தா எப்படியிருக்கும்ன்னு பார்க்கலாம்னு’ என்று நொண்டி சமாதானமும் சொன்னார். அதன் படி தர்பீஸ் தேசத்தின் புதிய அரசி ‘பாரு’ (அப்ப கன்டென்ட் கியாரண்டி!) கானா தேசத்தின் புதிய அரசன் விக்ரம். (கெட்டப் மாற்றியும்  புலவர் மாதிரியேதான் இருந்தார்!). 

டிரான்ஸ்பர் ஆன புதிய மன்னர் விக்கல்ராயனுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. அதைத் தொடர்ந்து தர்பீஸ் தேசத்து ராணியான பாருவை பல்லக்கில் தூக்கி வந்தார். “எங்கள் ராணி.. கண்ணழகி.. மதியழகி” என்று சர்காஸமாக வாழ்த்துரை வழங்கினார் கனி. இதே ‘கண்ணழகியை’ பிடித்துக் கொண்டு உரத்த குரலில் முழங்கினார் திவாகர். 

‘நாம் மரியாதை தெரிந்தவர்கள். எதிரி தேசமாக இருந்தாலும் அவர்களின் ராணிக்கு எழுந்து நில்லுங்கள்’ என்று உத்தரவிட்டார் விக்ரம். ஆனால் யாரும் எழவில்லை. “எழுந்து நில்லுங்களேண்டா அப்ரண்டிஸ்களா” என்கிற மாதிரி கோபப்பட்டார். “மன்னரும் எழுந்து நின்றால் நன்றாக இருக்கும்” என்று பேராசைப்பட்டார் பாரு. 


கலைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட திவாகர், தர்பீஸ் தேசத்தின் புகழை நடிப்பால் வெளிப்படுத்துவார் என்று அரசி அறிவிக்க “அவரோட ஜாக்கெட் கொக்கி பின்னால் கழண்டு இருக்கு” என்று நக்கலடித்தார் வினோத். ‘அது ஓப்பன் டைப். லேட்டஸ்ட் டிசைன்’ என்று சிரிப்புடன் சமாளித்தார் சபரி. 

திவாகரை டிசைன் டிசைனாக பங்கம் செய்த வினோத்

அராரோவும் வியானாவும் அரசியை புகழுரையால் அர்ச்சனை செய்தார்கள். தர்பீஸ் தேசத்தைக் கிண்டலடித்து வினோத் பாட வாந்தி வருவதுபோல் மிகையாக பாவனை செய்து நமக்கு வாந்தி வர வைத்தார் திவாகர். “எங்கள் மன்னர் மீசை வைத்தால் நடிகர் திலகம்.. மீசை வைக்காவிட்டால் தில்லுமுல்லு ரஜினிகாந்த்’ என்று இஷ்டத்திற்கு அடித்து விட்டார் கம்ரு. 

“அரசவை வாசலிலேயே எமதர்மன் போட்டோவை மாட்டி வைத்திருக்கும் தர்பீஸ் தேசம்..’ என்று திவாகர் குறித்து வினோத் அடித்த கமென்ட் ரசிக்கத்தக்கது. சிம்மாசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்த பாரு ‘மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்’ என்கிற மாதிரி முழங்கினார். (எங்கேயோ கேட்ட குரல்!). 

“எனது தேசத்துப் பெண்கள் நவரசங்களையும் நடிப்பால் பிழிந்து காட்டுவார்கள்” என்று பாரு அறிவிக்க ‘அன்பு’ என்பதை முகபாவத்தில் வெளிப்படுத்தினார் கனி. ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே’ என்று எதிர்ப்பக்கம் பாட்டு கேட்டது. 

BB TAMIL 9: DAY 38
BB TAMIL 9: DAY 38

அடுத்ததாக அரோராவை அறிமுகப்படுத்திய பாரு ‘அழகும் அறிவும் அப்படியே என்னைப்போலவே’ என்று சொல்லி சிரிக்க வைத்தார். அரசியின் மறுபாதி வியானா அடுத்ததாக வந்து தன் நடிப்புத் திறமையைக் காட்ட ‘கை கொட்டிச் சிரிப்பார்கள்.. ஊரார் சிரிப்பார்கள்’ என்று பாட்டுச் சத்தம் எதிர்ப்பக்கமிருந்து கேட்டது. 

‘இதென்ன பிரமாதம். அடுத்து ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்கிற காமெடியாக நடிப்பு அரக்கன் எழுந்து வந்து தன் நடிப்புத் திறமையைக் கொட்ட ஆரம்பித்தார். எதிராளிகளைப் பார்த்து சிரியோ.. சிரி என்று இவர் சிரிக்க ‘எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ அறிவாரோ’ என்று சேது பட பாடலைப் பாடி பங்கம் செய்தது கானா தேசம். 

“கவலைப்படாதே.. எக்ஸ் மன்னா…’ என்று திவாகரை கிண்டலடித்து பாடினார் வினோத். பாருவிடம் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இளவரசி அரோராவை திவாகர் அவமரியாதையாக பேசி விட்டாராம். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற பிராதை கொண்டு வந்தார் ராஜமாதா கனி. 

திவாகருக்கு எதிரான வழக்கு - நாட்டாமை… தீர்ப்பை மாத்திச் சொல்லு


“எதிர் தேசத்தினர் என்னை உருவக்கேலி செய்கிறார்கள். பதிலுக்கு நானும் செய்தேன். அதை அரோரா ஆட்சேபித்தார்.. அதனால்..’ என்று திவாகர் விளக்கம் அளிக்க ‘case adjourned’ என்றார் அரசி. 

எஃப்ஜேவும் சுபிக்ஷாவும் beatboxing செய்ய (அந்தக் காலத்திலேயே இத்தகைய இசை வடிவம் நம்மிடம் இருந்துள்ளது என்பதுதான் வரலாறு!) ராப் சாங் பாடப்பட, எதிர் அணியில் இருந்தாலும் ரசித்துக் கேட்டார் வினோத். 

வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பித்தது. ‘என் தங்கையை அவமதித்தது தவறு.. அமைச்சர் சபையில் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று அரசி உத்தரவிட “போங்கப்பா.. நான் ஆட்டத்துக்கு வரலை..” என்று தண்டாயுதத்தை கீழே வீசி விட்டு பதவியை ராஜினாமா செய்தார் திவாகர். அரசி ஜெர்க் ஆகி “எதிரணி செய்ததற்கு நாம் போர் தொடுக்கப் போகிறோம். ஆனால் இது உள் பிரச்சினை” என்று திவாகரை சமாதானப்படுத்துவது போல பேச அதை திவாகர் சட்டையே செய்யவில்லை. 

BB TAMIL 9: DAY 38

“அரசியை அவமரியாதை செய்யும் அமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும்” என்று ஐடியா கொடுத்தார் தளபதி சாண்ட்ரா. “நான் டாஸ்க்கை விட்டு வெளியே போறேன். கோள்மூட்டி ராஜமாதா தப்புத்தப்பா சொல்றாங்க. கிச்சனை வெச்சு ரொம்ப நாள் ஓட்ட முடியாது” என்றெல்லாம் திவாகர் கத்த, இப்போது கனிக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது. 
“பெண்கள் ஆட்சியில் ஒரு பெண்ணுக்கு அவமதிப்பு நடந்ததற்கான நீதியைத்தான் கேட்டேன். அதற்காக அநாவசியமாக பேசக்கூடாது. கோள்மூட்டின்றதுல்லாம் என்ன வார்த்தை..” என்று திவாகரிடம் கண்டிப்பான குரலில் கனி சத்தம் போட ‘மரியாதை கெட்ரும்’ என்று அவரும் மல்லுக்கட்ட “எங்க.. மரியாதையை கெடுங்க பார்க்கலாம்?” என்று கோதாவில் இறங்கினார் கனி. இருவரையும் சமாதானப்படுத்த முயன்று தோற்றார் சபரி. 

“சாப்பாட்டை வெச்சு ஏமாத்தறாங்க’ - கனி மீது புகார் கூறிய திவாகர்

இதற்கான பஞ்சாயத்து தனியாக நடந்தது. “சாப்பாடு போட்டு ஏமாத்தறேன்னு தொடர்ந்து சொல்லிட்டு இருக்கார். கிச்சன்ல நின்று வேலை பார்த்தாதான் தெரியும். நேத்து கால்வலியோட அத்தனை தோசை சுட்டேன். இவர் நல்லா சாப்பிடற மனுஷனாச்சேன்னு எக்ஸ்ட்ரா தோசை கூட கொடுத்தேன். சாப்பாட்டை நான் ஆயுதமா எடுத்ததே இல்ல” என்று கனி உருக்கமாகச் சொல்ல, அடுத்த வேளை தோசைக்கு பங்கம் வந்து விடும் என்று நினைத்தாரோ, அல்லது உண்மையாகவே உணர்ந்தாரோ “ஸாரிக்கா” என்று மன்னிப்பு கேட்டார் திவாகர். 

அரசி என்கிற கெத்துடன் சபையில் மன்னிப்பு கேட்கச் சொல்லி விட்டாலும், ஆட்டத்தில் திவாகரின் ஆதரவை இழக்கக்கூடாது என்று சாமர்த்தியமாக கணக்கு போட்ட பாரு “இல்லேண்ணே.. நான் என்ன சொல்றேன்.. எனக்கு நீ.. உனக்கு நான் ஆதரவு.. இது எப்பவும் மாறக்கூடாது.. ஒருத்தரையொருத்தர் விட்டுக் கொடுக்கக்கூடாது. ‘மன்னிப்புதானே கேட்கிறாய். இதோ வைத்துக் கொள்’ன்னு நீ தூக்கிப் போட்டிருக்கலாம். ஆட்டத்துல இருந்து போகாத” என்று திவாகரை சமாதானப்படுத்த, அவர் மசிவதாக இல்லை. “இல்ல.. பாரு. எதிர் டீம் ரொம்ப அவமானப்படுத்தினாங்க..” என்று திமிறிக் கொண்டு விலகினார். 

‘கொடி பறக்குது’ என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இரு அணிகளும் தங்கள் தேசத்து கொடிகளை வீட்டிற்குள் ஒளித்து வைக்க வேண்டும். எதிரணி கண்டுபிடிக்க வேண்டும். யார் முதலில் மூன்று கொடிகளை கண்டுபிடிக்கிறார்களோ, அந்த அணியே வெற்றி. 

BB TAMIL 9: DAY 38

‘குளிர்பதனப் பெட்டியின் பின்னால் ஒளித்து வைத்திருக்கிறேன்’ என்று சொல்வதற்குப் பதில் ‘குளிர்பானப் பெட்டி.. குளிர் சாதனப் பெட்டி’ என்று தத்தக்கா பித்தக்கா தமிழில் பேசினார் அமித். 


ராஜ உடையில் மீண்டும் கம்பீரமாக உலா வந்தார் திவாகர். (டாஸ்க்ல சேர்ந்துட்டாராம்!). “இந்தப் பொம்மைதான் எனக்கு வேணும்” என்று கெமி காலை உதைத்துக்கொண்டு அழ “இல்லம்மா.. அந்தப் பொம்மை நல்லாயில்லை. வேற பொம்மை வாங்கித்தரேன்” என்று திவாகரை ரிப்பீட் மோடில் பங்கம் செய்தார் வினோத். 

ஆங்கிலமும் அரைகுறை செந்தமிழும் கலந்து இவர்கள் பேசுவதைப் பார்க்க சகிக்காத பிக் பாஸ், அவர்களுடன் ஜோதியில் இணைந்து ‘இது ஒரு ஃபன் டாஸ்க்” என்று நக்கலடித்தார். கொடி டாஸ்க்கில் ஒரு கொடூரமான காமெடி நடந்தது. தங்கள் தேசத்தின் கொடியையே கண்டுபிடித்து வியானா வெற்றி உற்சாகத்துடன் வர ‘லூஸே. அது நம்ம நாட்டு கொடி’ என்று தலையில் அடித்துக் கொண்டார் எஃப்ஜே. மூன்றாவது கொடியை எஃப்ஜே கண்டுபிடித்து விட இரண்டாவது நாளும் தர்பீஸ் தேசத்திற்கே வெற்றி. 

மீண்டும் உடைந்து போன பாரு -கம்ரு கூட்டணி 


திவாகரின் கமென்ட் கனியைப் புண்படுத்தியிருக்க வேண்டும். அவர் ரகசியமாகச் சென்று கண்ணீர் விட சபரி சமாதானப்படுத்தினார். “தமிழக மக்களே.. பாருங்க.. இந்த வினோத் என்னை பயங்கரமா உருவக்கேலி பண்றாரு.. கனியும் எஃப்ஜேவும் சேர்ந்து சிரிக்கறாங்க.. மன உளைச்சலா இருக்கு. நைட்டு நிம்மதியா தூங்க விட மாட்றாங்க..” என்று காமிரா முன்பு வந்து திவாகர் புகார் தெரிவிக்க, காமிராவிற்கே பொறுக்காமல் அது திரும்பிக் கொண்டு விட்டது. முகம் வாடி திரும்பினார் திவாகர். (அப்ப தர்பீஸ் சொன்னது பொய் புகார்களா?!)

BB TAMIL 9: DAY 38

“நீ திவாகர ஓவரா கலாய்க்காதே.. அதையே அவர் அட்வான்டேஜா எடுத்துப்பாரு” என்று வினோத்திற்கு எச்சரிக்கை தந்தார் சாண்ட்ரா. “நான் உருவக்கேலி பண்ணவேயில்லை. வீடியோல எல்லாம் ரெக்கார்ட் ஆகியிருக்கும்” என்று அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார் வினோத். “அவருல்லாம் நம்மள மாதிரி நகைச்சுவைக் கலைஞன் கிடையாது. ஹீரோங்கிற கற்பனை உலகத்துல வாழறாரு.. அதைக் கலைச்சா.. கோபம் வந்துடும். நாளைக்கு டாஸ்க்ல வஞ்சப்புகழ்ச்சி அணி டெக்னிக்கை ஃபாலோ பண்ணலாம்” என்று ஐடியா கொடுத்தார் விக்ரம். 


பாரு -கம்ரு இடையிலான கூட்டணி மீண்டும் உடையும் சந்தர்ப்பம் வந்தது.  நெய்யை எக்ஸ்ட்ராவாக கம்ரு லவட்டி விட, கிச்சன் டீமில் இருக்கும் பாரு அதை பொதுவில் தெரிவித்து விட்டார். இதனால் காண்டான கம்ரு “நீ அவ்ளோ கரெக்ட்டான ஆளா.. என்னை அசிங்கப்படுத்தறியா.. ஏன் இப்படி கேவலமா பண்றே.. என் கிட்டவே கேம் விளையாடாத.. குட்பை. கிளம்பு” என்று பாருவிடம் கோபித்துக் கொண்டார். 

கம்ரு அரோராவிடம் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டே இந்த வசனங்களைப் பேசியதால் ‘ஓகே.. இவனுக்கு இப்ப என்ன சொன்னாலும் மண்டையில ஏறாது’ என்று நினைத்துக் கொண்ட பாரு “அப்புறமா பேசறேன்” என்று கிளம்பிப் போனார். 

இரண்டு தேசத்தின் மக்களையும் ‘கைலாசா’ தேசத்திற்கு நாடு கடத்தினால்தான் நாம் பிழைப்போம் போலிருக்கிறது. 

BB Tamil 9: ``நெருக்கமானவர்கள மட்டும் முதல் 5 இடத்துல வச்சுருக்காங்க'' - திவாகர் காட்டம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க

BB Tamil 9: யாருக்கு எவ்வளவு சம்பளம்?- அதிக சம்பளம் இவருக்கா?!

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.இருபது பேருடன் தொடங்கிய சீசனில் தற்போது நந்தினி, பிரவீன் காந்த், அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன்... மேலும் பார்க்க

அவங்களுடைய‌ பேக்கரி அனுபவம் ஐஸ்கிரீம் பார்லரை டெவலப் பண்ண உதவும்; பிசினஸில் இறங்கிய விஷ்ணு-சௌந்தர்யா

பிக் பாஸ் சீசன் 8 ல் ரன்னராக வந்த சௌந்தர்யா ஏழாவது சீசனில் டாப் 5 பேரில் ஒருவராக வந்த விஷ்ணுவுக்கு புரப்போஸ் செய்தது எல்லோருக்கும் தெரிந்ததே.கடந்த ஜனவரியில் அந்த சீசன் முடிந்த நேரத்தில் நாம் விஷ்ணுவிட... மேலும் பார்க்க

BB Tamil 9: "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது" - பார்வதியிடம் கோபப்படும் திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க