`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உ...
மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்
மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தலைமை எடுத்துள்ள சர்வேயில், மதுரை மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில் நாம் உறுதியாக வெல்லப்போகிறோம் என்று ரிசல்ட் வந்துள்ளது...” என்று பேசியிருந்தார். அவர் பேச்சு சர்ச்சையாகி, “மதுரையில், மொத்தம் 10 தொகுதிகள் இருக்கின்றன. ஆனால், எட்டில்தான் வெற்றிபெறுவோம் என்கிறார் மாஜி. இரண்டு ஆளும் தரப்பு புள்ளிகளுக்கு ஆதரவாக, அவர்கள் போட்டியிடும் தொகுதியில் இலைக் கட்சி தோற்றுப்போய்விடும் என்று சொல்லாமல் சொல்கிறார். பேச்சுக்குக்கூட அந்த ஆளுங்கட்சிப் புள்ளிகள் தோற்றுப்போய்விடுவார்கள் என்று சொல்லமாட்டேன் என்கிறாரே... அப்படியென்ன அவர்கள்மீது இவருக்கு பாசம்...” என்று கொதிக்கிறார்கள் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள். இந்நிலையில், ‘மதுரை இலைக் கட்சியின் உத்தேசப் பட்டியல்’ என்ற ஒன்றை கசியவிட்டிருக்கிறாராம் அந்த மாஜி. ஏற்கெனவே கடுப்பில் இருந்த கட்சிக்காரர்களை, அந்தப் பட்டியல் மேலும் டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம்!
கொப்பரைத் தேங்காய்க்குப் பெயரெடுத்த தொகுதியின் எம்.பி-யாக இருப்பவர் ‘முக்கண்’ பிரமுகர். நாளுக்கு நாள் அவரது அட்ராட்சிட்டி ஓவராகி வருகிறதாம். கனிமவள ‘பிசினஸ்’ தொடங்கி... பல விதத்திலும் கல்லா கட்டிவருகிறாராம். இதில், மண்டலப் பொறுப்பாளரான இனிப்பு மாண்புமிகுவுக்கும் ஒரு பகுதி செல்வதால், ‘முக்கண்’ பிரமுகரை யாராலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியவில்லையாம். இந்தநிலையில், கட்சியின் முக்கியமான மாவட்டப் பொறுப்பை ‘முக்கண்’ பிரமுகருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் இனிப்பு மாண்புமிகு. அதோடு, ‘எலெக்ஷனுக்கு அதிகப்படியான இனிப்பு தேவை’ என்றும் மாண்புமிகு உத்தரவு போட்டிருப்பதால், செய்யக்கூடாத அத்தனை விஷயங்களையும் செய்து, வசூல் தாண்டவம் ஆடத் தயாராகிவருகிறாராம் ‘முக்கண்’ பிரமுகர்!
ஜில் மாவட்டம் முழுவதும், ஜல் ஜீவன் திட்டக் குழாய்கள் பதிக்கும் ஒப்பந்தத்தை, பல்க்காகக் கொத்தித் தூக்கியிருக்கிறாராம் இலைக் கட்சியின் பிரமுகர் ஒருவர். அந்த ஒப்பந்தத்தில், இவர்மீது ஏகப்பட்ட முறைகேடு புகார்கள் எழுந்திருக்கிறதாம். ‘கம்மி விலைக்கு, தரமற்ற குழாய்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, இரும்புக் குழாய்களின் மீட்டர் அளவுகளைக் கூட்டி பில் தீட்டுவது வரை, ஏகப்பட்ட முறைகேடுகளைச் செய்து கோடிகளில் கொழித்து வருகிறாராம். கேள்வி எழுப்பும் ஆளுங்கட்சிப் புள்ளிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லட்டுகளை அள்ளி வீசி வாயை அடைக்கிறார்’ என்று கொதிக்கிறார்கள் உள்ளூர் சமூக ஆர்வலர்கள். பழங்குடி மக்களும், ‘குழாயில் தண்ணீர் வராமல் காற்றுதான் வருகிறது’ என்று கண்ணீர் வடித்துவருகிறார்களாம். ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படாத இலைக் கட்சிப் புள்ளி, பக்கத்து மாவட்டத்தில் பெரிய பங்களபொன்றைக் கட்டிக்கொண்டு ஏகபோகமாக வாழ்கிறாராம்!
தென்கோடி மாவட்டத்திலுள்ள முக்கியமான தொகுதியில், காவிக் கட்சியின் அகிம்சையானவர்தான் எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவரை ஓரம்கட்டிவிட்டு, வரும் தேர்தலில் அந்தத் தொகுதியில் களமிறங்க தீவிரம் காட்டிவருகிறாராம் மாஜி அமைச்சர். ‘ஓரளவுக்குத்தான் நான் அமைதியாக இருப்பேன். தொகுதியை யாருக்காவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்...’ என்று கறார் காட்டுகிறாராம் அகிம்சையானவர்.
ஒரே தொகுதிக்காக மோதிக்கொள்ளும் அவர்கள் இருவருக்கும், மேலிடத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதால், புது ரூட்டைக் கையில் எடுத்திருக்கிறாராம் மாஜி. அதாவது, ஆளும் அரசுக்கு எதிராகத் தடித்த வார்த்தைகளோடு பிரஸ்மீட், மேடைகளில் முழக்கம் என அதிரடித்து வருகிறாராம் மாஜி. மறுபக்கம், அதிரடி எதுவும் காட்டாமல், தொகுதிக்குள் ரவுண்ட் அடித்து, வீதிவீதியாக வலம்வந்து தனது இமெஜ்ஜை ஏற்றிவருகிறாராம் அகிம்சை. இவர்கள் இருவரின் தீவிர அரசியலால், மாவட்டமே படு சூடாகிறது. ‘பதவிக்காக இரண்டு பெருசுகளும் எப்படி ஓடுறாங்க பாருங்க... இவர்களால் நமக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை’ என நொந்துகொள்கிறார்கள் காவி இளசுகள்!
ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள மாவட்டத்தின் நகராட்சியில், ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கிறதாம். சமீபத்தில் நடந்துமுடிந்த மன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பலரும் கலந்துகொள்ளாத நிலையில், சகட்டுமேனிக்குத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்களாம். வராத கவுன்சிலர்களை அழைத்தும், அவர்கள் வீட்டுக்கே நேரடியாகச் சென்றும், கோப்புகளில் கையெழுத்து வாங்கி, மிகப்பெரிய அளவில் தில்லுமுல்லும் அரங்கேறியிருக்கிறதாம். இந்த முறைகேடுக்கு உடன்படாத சில கவுன்சிலர்கள், “எல்லாத்தையுமே நீங்களே முடிவு செய்றீங்க. எங்களுக்கு எதுவுமே தெரியுறதில்ல...” என்று நகர்மன்றப் புள்ளியிடம் எகிறியிருக்கிறார்கள். பதிலுக்கு அவரோ, “எல்லாமே எம்.எல்.ஏ-தான் முடிவு பன்றாரு. உங்களைப்போல நானும் என்ன செய்யுறதுன்னு தெரியாமத்தான் முழுச்சிக்கிட்டு நிக்கிறேன்...’ என்று சோக கீதம் வாசித்திருக்கிறார். ‘முதன்மையானவருடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதால், இந்த நகராட்சியில் எம்.எல்.ஏ வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது’ என நொந்துகொள்கிறார்கள் கவுன்சிலர்கள்!


















