நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதின விழா | Photo Album
`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம இளைஞரின் கோரிக்கை
மகாராஷ்டிரா கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அதுவும் விவசாயம் செய்யும் இளைஞர்கள்தான் இது போன்ற சிக்கல்களை அதிக அளவில் சந்திக்கின்றனர். இதனால் இளைஞர்கள் 40 வயது வரை திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரத் பவார் அகோலா பகுதிக்கு சென்று இருந்தார். அங்குள்ள இளைஞர்கள் சரத்பவாரை சந்தித்து மனு கொடுத்தனர். வாலிபர் ஒருவர் சரத் பவாரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவை சரத்பவார் வாங்கி வைத்துக்கொண்டார். அதன் பிறகு அதனை படித்து பார்த்தபோது சரத்பவார் அதிர்ச்சியாகிவிட்டார்.
அதில் அந்த வாலிபர் சரத்பவாரிடம் தனக்கு திருமணத்திற்கு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் தனது கடிதத்தில், ``எனக்கு நாளுக்கு நாள் வயதாகிக்கொண்டே செல்கிறது. எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா என்று தெரிய வில்லை. நான் தனியாக வாழவேண்டியிருக்கிறது. எனவே தயவு செய்து எனது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். எனக்கு ஒரு மனைவியை ஏற்பாடு செய்து கொடுங்கள். எந்த சாதியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை.
பெண்ணின் வீட்டில் வேண்டுமானாலும் வாழ தயாராக இருக்கிறேன். நன்றாக வேலை செய்வேன் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். குடும்பத்தையும் நன்றாக நடத்துவேன். தயவு செய்து எனக்கு வாழ்க்கை கொடுங்கள். உங்களது கருணையை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அக்கடிதத்தை சரத்பவார் தனது கட்சி நிர்வாகி அனில் தேஷ்முக்குடன் பகிர்ந்து கொண்டார். இக்கடிதம் மூலம் சாமானிய மக்கள் இன்னும் எந்த அளவுக்கு சரத் பவாரை நம்புகிறார்கள் என்பது தெரிகிறது.
அந்த வாலிபர் தனது முகவரி மற்றும் போன் நம்பரையும் அக்கடிதத்தில் எழுதி இருக்கிறார். இது சரத்பவாருக்கு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத இளைஞர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று திருமணத்திற்கு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஒருபுறம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. மற்றொருபுறம் பெண்கள் படித்து வேலையில் இருப்பதால் விவசாயம் செய்யும் கிராமத்து இளைஞர்களை திருமணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் என்கிறார்கள்.




















