Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA வ...
"அதிரடி அபராதங்கள்; ஆம்னி பேருந்து விவகாரத்தில் சுமூக தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி
கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.
கேரள போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), "பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை" எனத் தெரிவித்திருக்கிறது.
இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகக் கூறியிருந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், 'அரசு தலையிட்டு அண்டை மாநிலங்களில் பேச்சு வார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்படுத் வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 13, 2025
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு…
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று கூறியிருக்கிறார்.




















