நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதின விழா | Photo Album
`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இதுபோக புதுச்சேரி, கேரளா மாநில அரசுகளும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களும் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த அனைத்து வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதங்களின் படி, ``மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது. அணை கட்டினால் தமிழ்நாடு பாதிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீர் பாதிக்கப்படும். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. மத்தியநீர் வள ஆணையம் ஒப்புதல் வழங்க முடியாது. மேலும் மத்திய நீர் ஆணையம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க எந்த அனுமதியும் வழங்க இயலாது. இதன் மீது முடிவு எடுக்க வேண்டியது நடுவர் மன்றம் தான். மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எதிரான எந்த அனுமதியையும் வழங்க முடியாது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வரும் உபரி நீர் வேறு ஒரு அணை கட்டுவதால் தடைபடும்.
குறிப்பாக 80 டி.எம்.சி நீர் தடைபடும். புதிய அணையின் நோக்கமே இந்த நீரை தடுக்க வேண்டும் என்பதே ஆகும். ஏற்கனவே காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. அதனால் புதிய அணை கட்ட தேவை இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட பல தருணங்களில் காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா இருந்திருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறோம்.
கடந்த 50 வருடங்களாக கர்நாடகாவுடன் காவிரிக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த அணை கட்டப்பட்டால் நிச்சயம் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது” என தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், ``கர்நாடக அரசு தற்போதைக்கு அணை கட்டப் போவதில்லை. மாறாக அணைக்கான உத்தேச வரைவு திட்ட அறிக்கையை தான் தயாரிக்க இருக்கிறார்கள். இது மிகவும் ஆரம்ப கட்ட பணிகள். அதில் என்ன பிரச்னைகள் இருக்கப் போகிறது? இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் உங்களுக்கான ஆட்சேபனைகளை மத்திய அரசிடமும் அல்லது உரிய அமைப்பிடமோ நீங்கள் எடுத்து வைக்க வேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும்” எனக் கருத்து கூறினார்கள்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக dpr எனப்படக்கூடிய ஆய்வறிக்கை தயார் செய்ய புதுவை மாநிலமும் கேரள மாநில அரசும் எதிர்ப்பு பதிவு செய்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ``மேக்கேதாட்டு அணை தொடர்பான திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக இப்பொழுதே உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடி இருப்பது என்பது மிகவும் முன்கூட்டியே நடந்துள்ளது. காவிரி விவகாரத்தில் அனைத்து விஷயங்களுக்குமான தீர்வை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பின் வழங்கி விட்டது.
குறிப்பாக நடுவர் மன்றம் அமைத்தது, அதிலிருந்து நிபுணர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்திருக்கிறோம். எனவே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான DPR அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் காவேரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நதிநீர் சம்பந்தமான அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காவிரி நதிநீரை திறந்து விட மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் கடைபிடிக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எந்த மாநிலமாவது கடைப்பிடிக்கவில்லை என்றால் அது தொடர்பாக உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகலாம். மேக்கேதாட்டு அணை விவகார தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சில மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன” என விரிவான உத்தரவுகளை பிறப்பித்தனர்.
உத்தரவு வாசித்து முடிக்கப்பட்டதற்கு பிறகு தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞரான உமாபதி, ``தற்போது காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது. இன்னமும் 50 ஆண்டுகளுக்கு மேலாகும் இந்த விவகாரம் முடிவடைய” எனக் கூறினார்.
அதற்கு சிரித்தபடியே பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ``நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்த வழக்கை பார்க்க நாங்கள் யாரும் இருக்க மாட்டோம். மேலும் மாநிலங்களுக்கிடையிலான இத்தகைய நதி நீர் பிரச்சனைகள் எப்பொழுதுமே தீர்க்கப்படாது” எனவும் சிரித்தபடியே கூறினார்.



















