'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்
கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமாணா கோயில், நெரூர் அக்னீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 64 கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்தச் சொத்துகளை மீட்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
"கரூர் மாவட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலம், ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும், அதன் விவரங்களையும் அறநிலையத்துறையின் கமிஷனர், கரூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
கோயில் நிலத்தை மீட்க ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். 2015-ல் கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை மாயமானதைக் கண்டுபிடித்து தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 20 கோயில்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, கடந்த 30 ஆம் தேதி நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, "வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 கோயில்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் அதில் கவனம் செலுத்தியதால் மீதமுள்ள 10 கோயில்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய ஆய்வு நடந்து வருவதால் அவகாசம் தேவை" என்று வாதிட்டனர்.
அவகாசம் அளித்த நீதிபதிகள், "கோயில் சொத்துகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்ற விவரத்தை நவம்பர் 25 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.



















