புத்தரி அறுவடைத் திருவிழா: கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடிய பழங்குடிகள்! | ...
`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். ஹரியானாவில் இருந்து தலைமை நீதிபதியாக தேர்வாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி பி.ஆர். கவாய் தனது பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன் நகலை நீதிபதி சூர்யா காந்துக்கும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த Surya Kant?
நீதிபதி சூர்யா காந்த் 2027, பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார். அவர் குறித்த சில முக்கிய தகவல்கள்!
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பெத்தாவர் என்ற கிராமத்தில் 1962 பிப்ரவரி 10ம் தேதி பிறந்தவர் சூர்யா காந்த். அங்குள்ள அரசு கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், ரோஹ்தக் மாவட்டத்தில் 1984ம் ஆண்டு மகாரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். பின்னர் 2011ல் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் படித்தார்.
1984ம் ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்காக சண்டிகருக்கு குடிபெயர்ந்தார். 2000ஆம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஹரியானாவின் தலைமை வழக்கறிஞராக பணியமர்த்தப்பட்டார். இந்தப் பதவிக்கு மிகவும் இளம் வயதில் அமர்த்தப்பட்ட நபராக திகழ்ந்தார். 2001ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தத்தைப் பெற்றார்.

2004ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) உறுப்பினராக இருந்தார். இந்திய சட்ட நிறுவனத்தின் பல குழுக்களில் பங்கு பெற்றிருந்தார்.
2018ம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019 மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
உச்ச நீதிமன்றத்தில், டெல்லி கள்ளநிதி கொள்கை தொடர்பான அர்விந்த் கெஜ்ரிவால் vs CBI (2024) வழக்கில் இடம்பெற்றிருந்தார். இரு நீதிபதிகள் அமர்வு டெல்லி முதலமைச்சருக்கு பிணை வழங்கியது. இந்த வழக்கில் அவருடன் இருந்த நீதிபதி உஜ்ஜல் புயான் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தபோதும், CBI கெஜ்ரிவாலை கைது செய்தது சட்டப்பூர்வமானது மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது எனத் தெரிவித்தார் சூர்யா காந்த்.



















