நீ சின்னப் பொண்ணு கிடையாதுல கிழவிதானேன்னு...! - Meera Krishna & Sushma Shares | ...
CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 6ம் தேதி நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பக்சி அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் மன்னிப்பு வழங்கிய பிறகு அதிகாரப்பூர்வமான விசாரணையை நடத்துவது நியாயமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திங்கட்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற விசாரணையில், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விகாஸ் சிங், "தலைமை நீதிபதி முதலில் வழக்கு தொடர வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால் கிஷோர் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, 'தனது செயலுக்கு பெருமைப்பட்டு' அதை மீண்டும் செய்வேன் என்றும் தெரிவித்தார்." என வாதாடினார்.
மேலும், "நடந்த சம்பவம் பெருமைக்குரியதாக மாற்றப்படுகிறது... இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நீதிமன்றத்துக்கு போதுமான அதிகாரம் உள்ளது.” என்றும் கூறினார்.
விகாஸ் சிங்கின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சூர்யா காந்த், "கிஷோர் செய்தது கடுமையான குற்றவியல் அவமதிப்பு... ஆனாலும் நீதிபதி ஏற்கனவே மன்னித்த நிலையில், நீதிமன்றம் இதைத் தொடர வேண்டுமா" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விகாஸ் சிங், "நீதிபதி அவரை மன்னித்ததாகக் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு மட்டுமே. நீதித்துறையின் சார்பானது அல்ல... மக்கள் இதைக் கூறி நகைக்கின்றனர்... அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அவரை சிறைக்கு அனுப்புங்கள்." எனக் காட்டமாக பதிலளித்தார்.

கைவிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கை
காலணி வீசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பாத சூழலில் வேறு அமர்வுகள் நடவடிக்கை எடுப்பது சரியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதி ஜோய்மல்யா பக்சி, "அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை சம்பந்தபட்ட நீதிபதியின் விருப்பத்துக்கே விட்டுவிடலாம்" எனக் கூறினார்.
தாக்குதல் நடந்த அன்றே "இது என்னைப் பாதிக்காது" என தனது வேலைகளைத் தொடர்ந்தார் நீதிபதி கவாய். பின்னர் இந்த சம்பவத்தை "மறக்கப்பட்ட அத்தியாயம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் விகாஸ் சிங், அக்டோபர் 6 தாக்குதலுக்கு பிறகான ராகேஷ் கிஷோரின் நடவடிக்கைகளையும், ஊடகங்களில் தான் செய்ததை பெருமைக்குரியதாக பறைசாற்றி பேசியது உள்ளிட்டவற்றைக் குற்றமாக கருதலாம் என வாதாடினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டு, இதுபோன்ற செயலை பெருமைக்குரியதாக கருதுவதைத் தடுக்க வழிமுறைகளை உருவாக்குவது குறித்து பார்க்கலாம் என்றதாக லிவ் லா தளம் கூறுகிறது.



















