பட்டுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியர் ...
அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!
நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.
புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அணியிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன.
கடைசி 4 இடங்களைப் பிடித்த இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன.

வரும் புதன் கிழமை (அக்டோபர் 29) முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களில் இருக்கும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
வியாழனன்று (அக்டோபர் 30) புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4-வது இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கெதிரான போட்டியில் கடைசி ஓவர்களில் தோற்றதால் நியூசிலாந்துடன் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடிக்குள்ளாகி பின்னர் அப்போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக ஆடி வெற்றிபெற்ற இந்திய அணிக்கு தற்போது அரையிறுதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் ஓப்பனிங்கில் ஸ்மிருதி மந்தனாவுடன் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 122 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்ட பிரதிகா ராவால் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

வங்காளதேசத்துக்கெதிரான நேற்றைய போட்டியில் ஃபீல்டிங்கின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அப்போதே களத்திலிருந்து வெளியேறினார்.
அடுத்து பேட்டிங்கின்போதும் காயத்தால் அவரால் களமிறங்க முடியாததால் அரையிறுதியில் அவர் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
மருத்துவ பரிசோதனையில் ஸ்கேன் செய்யப்பட்டு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காயத்தால் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து பிரதிகா ராவால் வெளியேறியிருக்கிறார்.
இதனால், அரையிறுதியில் ஸ்மிரிதி மந்தனாவுடன் யார் ஓப்பனிங்கில் இறங்குவார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.
தற்போதைய தகவலின்படி பிரதிகா ராவலுக்குப் பதில் ஹர்லீன் தியோல் ஓப்பனிங்கில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
நியூஸிலாந்துக்கெதிரான போட்டியில் 15 ரன்கள் தொட்டபோது தனது ஒருநாள் போட்டி கரியரில் 1,000 எட்டிய பிரதிகா ராவல், 21-ம் நூற்றாண்டில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களை எட்டிய அதிவேக வீராங்கனை என்ற சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட (1973 முதல்) கால் நூற்றாண்டாகத் தனது உலகக் கோப்பையை வெல்ல போராடிக்கொண்டிருக்கும் இந்திய அணியும், மறுப்பக்கம் அதிக உலகக் கோப்பைகளை வென்ற (7 முறை) அணியாகத் திகழும் ஆஸ்திரேலியாவும் மோதும் அரையிறுதியில் எந்த அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்ற உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

















