Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு...
Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் அரையிறுதியில் மீதமிருக்கும் ஓர் இடத்துக்கு செல்லப்போவது நீயா இல்லை நானா என்ற முக்கியமான போட்டியில் நேற்று (அக்டோபர் 23) நியூசிலாந்தும், இந்தியாவும் மோதியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கைத் தேர்வுசெய்யவே முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி முதல் 10 ஓவர்களில் மிக மிக மெதுவாக ஆடி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஆனால், அதன்பிறகு அதிரடிக்கு மோடுக்கு சென்ற ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் கூட்டணி நியூசிலாந்துக்கு விக்கெட் வாய்ப்பே கொடுக்காமல் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டது.
சதமடித்து ஆடிக்கொண்டிருந்த மந்தனா 109 ரன்களில் ஆட்டமிழந்தபோதுதான் நியூசிலாந்து பெருமூச்சு விட்டது.
ஆனால், அடுத்து வந்த ஜெமிமாவும் அதிரடி காட்ட மறுமுனையில் சைலண்டாக ரன் அடித்த வேகமே தெரியாமல் சதமடித்தார் பிரதிகா.
இந்த பார்ட்னர்ஷிப் 70 ரன்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் 122 ரன்களில் பிரதிகா அவுட்டானார்.
ஆனாலும் ஜெமிமா தனது வேகத்தை நிறுத்தாமல் அரைசதம் கடந்தார். 48 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

பின்னர் மழை நின்றதும் போட்டி 49 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு கடைசி ஓவர் இந்தியாவுக்கு வீசப்பட்டது.
அந்தக் கடைசி ஓவரில் ஒரு விக்கெட் போனாலும் 11 ரன்கள் வரவே இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது.
பின்னர் மீண்டும் மழை வரவே போட்டி 44 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு டி.எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓப்பனிங் வீராங்கனை சூசி பேட்ஸை இரண்டாவது ஓவரிலேயே 1 ரன்னில் அவுட்டாக்கி இந்தியாவுக்கு நல்ல மொமென்ட்டம் ஏற்படுத்திக் கொடுத்தார் கிராந்தி கவுட்.
அடுத்து இணைந்த ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர் இணை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்துக்கு நல்ல அடித்தளமிட்டனர்.

ஆனால், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்த அடுத்த கணத்திலேயே ஜார்ஜியா பிளிம்மரை 30 ரன்னிலும், கேப்டன் சோபி டிவைனை 6 ரன்னிலும் அவுட்டாக்கி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார் ரேணுகா சிங்.
21 ஓவர்களில் 115 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது நியூசிலாந்து.
அந்த நேரத்தில், அமெலியா கெர்ருடன் ப்ரூக் ஹாலிடே இணைந்து அதிரடி காட்ட இந்த பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது.
இந்த இடத்தில்தான் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த அமெலியா கெர்ரை 45 ரன்களில் அவுட்டாக்கி போட்டியை இந்தியா பக்கம் இழுத்தார் ஸ்னே ராணா.
அடுத்து வந்த மேடி கிரீன் 18 ரன்களில் அவுட்டானாலும் அதன்பிறகு இணைந்த ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ் ஜோடி இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியது.
ப்ரூக் ஹாலிடே அரைசதம் கடக்க இவர்கள் கூட்டணி 70 ரன்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

பின்னர், 39-வது ஓவரில் ப்ரூக் ஹாலிடேவை 80 ரன்களில் ஸ்ரீ சரணி அவுட்டாக்கியதும் வெற்றி கிட்டத்தட்ட இந்தியாவுக்கு உறுதியானது.
கடைசி 6 ஓவர்களில் நியூசிலாந்த்தின் வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் அந்த அணியால் 44 ஓவர்கள் முடிவில் 271 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
95 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 109 ரன்கள் அடித்த மந்தனா ஆட்ட நாயகி விருதை வென்றார்.


















