சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?
`என்னை மன்னிச்சிருங்க; சூழல் சரியில்ல...' - கரூர் குடும்பத்தினரிடம் விஜய் உருக்கம்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்றிரவே கரூரிலிருந்து மாமல்லபுரம் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒரு தனியார் விடுதியில் அத்தனை குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற விஜய் இன்று காலை எட்டரை மணியளவில் தனியார் விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணிக்கு சந்திப்பு தொடங்கியது.
ஒவ்வொரு குடும்பத்தினராக தனித்தனியாகச் சந்தித்த விஜய் 15-லிருந்து 20 நிமிடங்கள் வரைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினிரிடமும் மனம் விட்டு பேசியிருக்கிறார்.
அவர்களிடம் துக்கம் கேட்டு ஆறுதல் கூறிய விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு தெரிந்திருக்கிறார். அத்தனைக் குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்திருக்கிறார்.
கரூரில் ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மனைவியும் 9-ம் வகுப்பு படிக்கும் மகளும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருந்தனர். விஜய்யைச் சந்திக்க அவரும் மாமல்லபுரம் வந்திருந்தார்.
விஜய்யிடம் பேசிவிட்டு வெளியே வந்தவரிடம் பேசினோம். அப்போது அவர், ``ரெண்டு நாளைக்கு முன்னாடி த.வெ.க கட்சி ஆளுங்க வீட்டுக்கு வந்து நிலைமையை எடுத்துச் சொல்லி சென்னை வரணும்னு அழைப்பு விடுத்தாங்க.
அவங்களே எல்லாம் ஏற்பாடு பண்ணி கூட்டிட்டு வந்தாங்க. விஜய் ஒரு 20 நிமிசம் பேசுனாரு. ஆறுதல் சொன்னாரு.

`என்னை மன்னிச்சிருங்க. நான் கரூர் வந்து உங்களை நேர்ல பாத்திருக்கணும். ஆனா, இப்போ சூழல் சரியில்ல. அதனாலதான் உங்களை சென்னை கூட்டிட்டு வர வேண்டியதா போச்சு. உங்க இழப்பையெல்லாம் ஈடு செய்யவே முடியாது.
என்னை மன்னிச்சிருங்க. உங்க குடும்பத்துல ஒருத்தனா உங்களோட என்னைக்குமே இருப்பேன். உங்களோட தேவைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்'னு சொன்னாரு.
நாங்க அவரை பார்த்துட்டு வெளியே வந்துட்டோம். இன்னும் மீட்டிங் தொடர்ந்து போயிட்டு இருக்கு.' என்றார்.















