தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும்...
Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?
இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன.
ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இந்தியா (7 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.
அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

புதன் கிழமை கவுகாத்தியில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்கள் பிடித்த இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
அடுத்து வியாழனன்று நேவி மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4-வது இடங்கள் பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் மழை காரணமாக அரையிறுதிப் போட்டிகள் கைவிடப்பட்டால் எந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வியை எழுந்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மட்டும் 6 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, தென்னாப்பிரிக்காவைத் தவிர மற்ற 7 அணிகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டிருக்கிறது.
லீக் சுற்றில் மழையால் போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ஆனால், அரையிறுதிப் போட்டியில் அப்படிச் செய்ய முடியாது.

எனவே அரையிறுதிப் போட்டி நடைபெறும் அன்றைய நாளில் மழை குறுக்கிடுகிறதென்றால், முதலில் மழை நின்ற பிறகு குறைந்தபட்சம் போட்டியை 20 ஓவர் போட்டியாக நடத்த முடியுமா என்று பார்க்கப்படும்.
20 ஓவர் போட்டியாகக்கூட நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்தால், ஐ.சி.சி விதிகளின்படி போட்டி ரிசர்வ் நாளான அடுத்த நாளுக்குப் போட்டி மாற்றப்படும்.
ஒருவேளை ரிசர்வ் நாளிலும் குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டியாகக்கூட நடத்த அளவுக்கு மழை குறுக்கிட்டால் அந்த இரண்டு அணிகளில் புள்ளிப்பட்டியலில் எந்த அணி அதிக புள்ளிகளைப் பெற்றிருந்ததோ அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
எனவே, இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டு ரிசர்வ் நாளிலும் மழையால் கைவிடப்பட்டால் புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அதேபோல், ஆஸ்திரேலியா vs இந்தியா போட்டி மழையால் நடத்த முடியாமல் போனால் இந்தியாவை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

மேலும், மழையால் இறுதிப்போட்டி நடத்த முடியாத சூழல் உருவானால் மேற்குறிப்பிட்ட விதிகள் பின்பற்றப்பட்டுக் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா போட்டியன்று கவுகாத்தியில் 33 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஆஸ்திரேலியா vs இந்தியா போட்டியன்று நேவி மும்பையில் 50 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த இரண்டு போட்டியிலும் மழை வரும்பட்சத்தில் தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் மழையுடனும் போராட வேண்டியிருக்கும்.
















