மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
தஞ்சாவூர்: ``ராஜ ராஜ சோழன் 1,040-வது சதய விழா'' - தங்க நிறத்தில் ஜொலித்த பெரிய கோயில்!
சோழப் பேரரசர்களில் தலைச்சிறந்த மன்னனாக திகழ்ந்தவர் மாமன்னன் ராஜராஜசோழன். இவர் எழுப்பிய தஞ்சாவூர் பெரியகோயில் 1,000 ஆண்டுகளை கடந்தும் வானுயர்ந்து, அழகும் கம்பீரமும் ஒருசேர அமைந்து சோழர்களின் அடையாளமாக காட்சி அளித்து வருகிறது.
உலகப் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழும் பெரியகோயில், சோழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
உலகம் முழுவதிலிருந்தும் தினமும் வரும் சுற்றுலாப் பயணிகள், மெய்சிலிர்க்க பெரியகோயிலை கண்டு மகிழ்ந்து வியக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற பெரியகோயில் தஞ்சாவூரின் அடையாளமும் தமிழர்களின் பெருமையுமாக திகழ்கிறது.

கட்டிடக்கலை மட்டுமின்றி மக்களாட்சி முறை, வணிகம், விவசாயம், நீர் மேலாண்மை, போர் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ராஜராஜசோழன், தெற்காசிய நாடுகள் முழுவதும் களையாண்டு தன் புகழை பரப்பி ஆட்சி செய்த பேரரசன்.
ராஜராஜசோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் வரும் தினத்தில் சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 1,040வது சதய விழா நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரியகோயிலுடன் தஞ்சாவூர் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பெரியகோயில் மின்னொளியில் தங்க நிறத்தில் ஜொலித்தது.
சதய விழா நேற்று காலை 8.15 மணியளவில் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி ஊர்வலத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பெரியகோயில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
பின்னர் கருத்தரங்கம், கவியரங்கம், வில்லுப்பாட்டு என விழா களைகட்டியது. 1,040-ம் ஆண்டை குறிக்கும் வகையில் 1,040 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதைத்தொடர்ந்து ‘பொன்னி வள நாட்டின் போர்வாள்’ என்ற தலைப்பில் ராஜராஜ சோழன் வரலாற்றை குறித்து நடத்தப்பட்ட டிஜிட்டல் நாடகம் பலரையும் கவர்ந்தது. இதனை திரைப்பட இயக்குநர் ராசி மணிவாசகம் இயக்கியிருந்தார்.
தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை 6.30 மணியளவில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்த பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். இதற்காக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.
மேலும் பெருவுடையாருக்கு 48 வகையான பொருள்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது `பெருவுடையாரே' என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் வணங்கினர். மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு விருது வழங்குதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் சதய விழாவில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் முழுவதும் உற்சாகம் கரை புரண்டது. சதயா விழா குழுவினர் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.



















