'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை
பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.
மேலும், `ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை, முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையில் நிதியுதவி, வீடுதோறும் 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம், புதிதாக 50 லட்ச இலவச வீடுகள், மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சைகள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களுக்கு முதுகலை வரை இலவச கல்வி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மெகா திறன் மையங்கள், நான்கு சர்வதேச விமான நிலையங்கள், செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்கா' என தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குறுதிகளை வானளவுக்கு அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார், தனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமாறு வாக்காளர்களுக்கு வீடியோ மூலம் இன்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில் நிதிஷ் குமார், ``பீகாரின் என் அன்பான சகோதர சகோதரிகளே, 2005 முதல் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்திருக்கிறீர்கள். அந்த சமயத்தில் பீகாரி என்பது அவமானமாக இருந்தது.
அப்போதிருந்து, நேர்மையாக கடின உழைப்புடன் இரவும் பகலும் உங்களுக்காகச் சேவை செய்து வருகிறோம். கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், குடிநீர், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கிறோம்.
முந்தைய அரசாங்கம் பெண்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. இப்போது பெண்களை மிகவும் வலிமையானவர்களாக நாங்கள் மாற்றியிருக்கிறோம்.
இனி அவர்கள் யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள், தங்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியும்.
ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் அனைத்து வகுப்பினரையும் வளர்ச்சியடையச் செய்திருக்கிறோம்.

நீங்கள் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, உயர் சாதியாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி அனைவருக்காகவும் நாங்கள் உழைத்துள்ளோம்.
என் குடும்பத்துக்காக எதையும் செய்யவில்லை. இப்போது, ஒரு பீகாரியாக இருப்பது அவமானகரமான விஷயம் அல்ல, மரியாதைக்குரிய விஷயம்.
எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேலும் அதிக வேலைகள் செய்யப்படும். அது பீகாரை மிகவும் மேலும் வளர்க்கும், சிறந்த மாநிலங்களில் சேர்க்கும்" என்று கோரிக்கை விடுத்தார்.
பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிட்டு 7-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வை கழற்றிவிட்டு ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் கைகோர்த்து 8-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று பின்னர் அதே தேர்தலுக்கு முன்பாக அவர்களைக் கழற்றிவிட்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் சேர்ந்து 9-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

















