SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எ...
10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காசிபுகா துணைப் பிரிவு பொறுப்பாளர் டி.எஸ்.பி. லட்சுமண ராவ் கூறியதாவது:
“இந்து மதத்தின் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்று ஏகாதசி சனிக்கிழமை.
அதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, விரதமிருந்து பிரார்த்தனை செய்தனர். காலை 11.30 மணியளவில் கூட்டம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்ததால், கோயில் வளாகத்திற்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

சிலர் அவசரமாக கூட்டத்துக்குள் நுழைந்து முன்னோக்கி நகர்ந்ததால், பலர் சரிந்து விழுந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு எக்ஸ் பதிவில், “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகாவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”
“இந்த துயரச்சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் சரியான சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்,” என்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். எனது எண்ணங்கள், தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு PMNRF-லிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்; காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி,``ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா கோயிலில் ஏற்பட்ட துயர கூட்ட நெரிசல் ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்தில் பத்து பக்தர்கள் உயிரிழந்தது மனவேதனையாக இருக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு உடனடியாக ஆதரவளிக்கவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கவும் அரசை வலியுறுத்துகிறேன்.
இது போன்ற சம்பவம் தொடர்வதற்கு அரசின் அலட்சியமே காரணம். இதுபோன்ற சம்பவங்கள் ஆந்திராவில் முதன்முறையல்ல.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியின் போது ஆறு பக்தர்களும், சிம்ஹாசலம் கோயிலில் ஏழு பக்தர்களும் உயிரிழந்துள்ளனர்.
அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. முற்றிலும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறது.
மீண்டும் மீண்டும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு, சந்திரபாபு நாயுடுவின் நிர்வாக திறமையின்மையை பிரதிபலிக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் திருப்பதியில் வைகுண்டத்வார சர்வதர்ஷன் டோக்கன்களுக்காக பக்தர்கள் காத்திருந்தபோது, ஆறு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
















