'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
செங்கோட்டையன் நீக்கம்: "தென் தமிழ்நாட்டில் எடப்பாடி பெரும் தோல்வியைச் சந்திப்பார்" - டிடிவி தினகரன்
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் இன்று (நவ.1) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், "எம்.ஜி.ஆர் காலம் முதல் இப்போதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மட்டும்தான்.
நேற்று முன் தினம் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி கிடையாது.
அவர் 10 நாட்களுக்கு முன்பு பசும்பொன்னுக்கு வருவதாக என்னிடம் சொல்லியிருந்தார், நானும் வாருங்கள் எனச் சொல்லியிருந்தேன்.
ஜெயலலிதா பசும்பொன் வரும்போதெல்லாம் செங்கோட்டையன்தான் ஏற்பாடுகளைச் செய்வார்.
அதேபோல ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு பம்பரம் போல செயல்படுவார் செங்கோட்டையன்.
பிரசாரத்துக்கு வரும்போது செங்கோட்டையன் வந்து பார்வையிட்டு ஒப்புதல் தந்தால்தான் ஜெயலலிதா நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே வருவார்.
அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற நபரை கட்சியை விட்டு நீக்கும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
செங்கோட்டையன் அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அழைப்பு விடுத்துள்ளார்.
பசும்பொன் வந்தபோது செங்கோட்டையன் எதுவும் அரசியல் பேசவில்லை. நான்தான் செய்தியாளர்களிடம் பேசினேன்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலைப் போல அதிமுகவை கையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
என்னையும், சசிகலாவையும், ஓபிஎஸ்ஸையும், செங்கோட்டையனையும் துரோகி என இபிஎஸ் சொல்கிறார்.

ஆனால் அவர்தான் துரோகி. 2021 தேர்தலில் அமித்ஷா அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்தார், நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
ஆனால், இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்தான் துரோகி.
இபிஎஸ்ஸை முதல்வராக்கிய 18 எம்எல்ஏக்களை நீக்கிய இபிஎஸ் துரோகியா? இபிஎஸ்ஸை முதல்வராக்கிய சசிகலா துரோகியா? இபிஎஸ்ஸை முதல்வராக்கப் பணியாற்றிய நான் துரோகியா? துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால், அது பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்.
முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்துசென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம்.
பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய பழனிசாமி தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திப்பார்

2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும், அமமுகதான் அதற்கான ஆயுதம். கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாலே பழனிசாமி பதறுவது ஏன்? அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே அழிவைச் சந்திப்பார்கள்.
2026-ல் சூரசம்ஹாரம் நடக்கும், பழனிசாமி வீழ்த்தப்படுவார். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதற்கு பழனிசாமியின் சுயநலமும், பதவி வெறியும்தான் காரணம்” என்று டிடிவி தினகரன் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

















